ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியை கோமதி சங்கரன், நந்தவனம் அறவாரியம் வழங்கி வரும் சாதனைப் பெண் விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு நந்தவனம் அறவாரியம் உலக அளவில் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்களைத் தேர்வு செய்து இந்த விருதினை வழங்கி கௌரவித்து வருகின்றது.
அவ்வகையில் இவ்வாண்டிற்கான விருது பெறுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து 150க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களை ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து அதிலிருந்து 32 பேரைத் தேர்வு செய்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களில் கோமதி சங்கரனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி சார்ந்த பல விருதுகளைப் பெற்றுள்ள ஆசிரியை கோமதி தற்போது கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராகப் பணிபுரிகின்றார்.
மேலும் இவர், கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் நனிசிறந்த ஆசிரியர் ஆவார். இது தொடர்பில் கோமதிக்கு 2004, 2008, 2014ஆம் ஆண்டுகளில் நனி சிறந்த சேவையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர இவர் பல ஆண்டுகளாக அஸ்தி அமைப்பின் அறிவியல் விழாக்களில் மாணவர்களோடு பங்கெடுத்து புத்தாக்க விருதுகளையும் சிறப்புப் பரிசுகளையும் வென்றுள்ளார்.
மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் விளங்கும் கோமதி தனது திறமையை மேலும் வெளிக்கொணர பல அறிவியல் புத்தாக்கத் தொழில்முறைநிலைப் போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார்.
பள்ளி, மாவட்டம், மாநில, தேசிய, அனைத்துலக ரீதியில் பல போட்டிகளில் பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார்.
இதன் காரணமாக இவருக்கு 2016ஆம் ஆண்டில் சிறந்த புத்தாக்க ஆசிரியர் விருதினையும் கல்வி அமைச்சு வழங்கி கௌரவித்தது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வர முனைந்த ஆசிரியர்களின் பங்கு அளப்பரியதாகும்.
அவரின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் அஸ்தி அமைப்பு தனது பத்தாம் ஆண்டு இளம் அறிவியல் ஆய்வாளர் விழாவில் இராமனுஜர் விருதை வழங்கிக் கௌரவித்தது.
தொடர்ந்து ஆசிரியை கோமதியின் ஙே்வையைப் பாராட்டி கோபியோ அமைப்பும் அனைத்துலக ங்ாதனையாளர் விருது வழங்கியது.
இதற்கிடையே, இந்திய மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற ஜோகூர் மேத்தா-இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல பட்டறைகளிலும் ஆசிரியை கோமதி பங்கெடுத்து மாணவர்களுக்குப் பாடம் போதித்துள்ளார்.
இதன் காரணமாக அவருக்குத் தொக்கோ குரு என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இது தவிர 14ஆவது பெர்டானா விருது நிகழ்ச்சியில் மலேசிய இந்தியத் தொழில் முனைவர் கூட்டுறவு கழகத்தினரால் ஆசிரியை கோமதிக்கு அனைத்துலக சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
இவ்விருதினை பெர்ஜாயா நிறுவன குழுமத் தலைவர் டான்ஸ்ரீ வின்சன் டான் வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில் அமிர் அறக்கட்டளையினால் நடத்தப்படும் நம்பிக்கை பள்ளித் திட்டத்தில் ஜோகூர், கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியும் இடம் பெற்றுள்ளது.
இத்திட்டத்தில் 10 மாநிலங்களிலிருந்து 85 பள்ளிகள் பங்கெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் 2018ஆம் ஆண்டில் இந்த அறக்கட்டளையின் சார்பாக ஆசிரியை கோமதிக்கு விவேக ஆசிரியை என்ற விருதும் வழங்கப்பட்டது.
அதே ஆண்டு கனடாவில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் போட்டியில் தொழில்துறைப் பிரிவில் களமிறங்கி 2 தங்கப் பதக்கங்களை வென்ற அவர், கொரியா நாட்டின் சிறந்த புத்தாக்க விருதினையும் 500 அமெரிக்க டாலர் ரொக்கப் பணத்தையும் வென்றுள்ளார்.
ஆசிரியை கோமதியின் புத்தாக்கத் திறமையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு புதுமைப் புத்தாக்க சிந்தனையாளர் விருதும் 1,000 அமெரிக்க டாலரையும் பரிசாக வழங்கியது.
மேலும், கடந்தாண்டு கனடாவின் புத்தாக்கப் போட்டியில் ஆசிரியை கோமதி இரு தங்கப் பதக்கங்களையும் வென்றதோடு அந்நாட்டின் சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.
அவரின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவுசார் சொத்துடைமை சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்டதோடு உலக அறிவியல் புத்தாக்கச் சங்கத்தின் சிறப்பு விருதும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி கடந்த மாதம் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக ஏற்பாட்டில் நடைபெற்ற மெய்நிகர் முறையிலான அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் ஆசிரியை கோமதி தொழில்நுட்பப் பிரிவில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
மேலும், இப்போட்டியில் அவரின் வழிகாட்டலோடு களமிறங்கிய இரு மாணவர் அணிகள் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளன.
இதனை அடுத்து அவர் அனைத்துலக சுற்றுச் சுழல் கண்டுபிடிப்பு புத்தாக்க அமைப்பினரால் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவியலாளராகத் தேர்வு ஙெ்ய்யப்பட்டுள்ளார்.