பள்ளிதோறும் இன்பத்தமிழ்

அருமையான அற்புதமான திட்டம்
டத்தோ சீரேஷ் ராஜா பாராட்டு

மம்பாவ்-

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே நாள் தோறும் தமிழ் நாளிதழ் வாசிப்புப் பழக்கத்தை வழக்கத்திற்கு கொண்டு வர மக்கள் ஓசை தொடங்கிவுள்ள இல்லந்தோறும் மக்கள் ஓசை, பள்ளிதோறும் இன்பத்தமிழ் திட்டம் அற்புதமான திட்டம் என நெகிரி செம்பிலான் சமூக நல்வாழ்வு சங்கத் தலைவர் டத்தோ சுரேஷ் ராஜா கூறினார்.

முன்னதாக இங்கு ஷங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு திங்கள் தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் 10 மக்கள் ஓசை என ஓராண்டுக்கு மக்கள் ஓசை நாளிதழை இலவசமாக வழங்க முன் வந்த அவர், அதற்கான காசோலையுடன் மனுப்பாரத்தையும் மக்கள் ஓசையிடம் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் படிக்கும் பருவத்தில் கல்வியில் முழுக் கவனத்தைப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை செலுத்துங்கள், அதே சமயம் விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

கல்விக்குப் பிறகு தொடங்கும் வேலையில் இளைஞர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தி அத்துறையில் ஒரு வல்லுனராக உயர்வதோடு கைநிறைய பணம் சம்பாதித்து பொருளாதரத் துறையில் மேம்பாடு காணுவதை இலக்காக கொண்டு செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

அதே வேளை நேரம் பொன்னானது, திரும்பக் கிடைக்காதது, எனவே அந்த நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காதீர் என இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நோக்கி அறிவுறுத்தினார்.

இதனிடையே கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் ஏதாவது ஒரு தொழில் திறனில் கைதேர்ந்து, அத்துறையை ஒரு தொழிலாக தொடங்குமாறு ஆலோசனை வழங்கிய அவர், வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை தொடங்குவதற்கு தனது நிறுவனத்தில், அதற்கான வாய்ப்பை வழங்கி வருவதாக தனியார் குத்தகை நிறுவனத்தின் உரிமையாளருமான சுரேஷ் கூறினார்.

ஆனால் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டும், உழைப்பதற்கு முன் வருவதில் பெரும்பாலான நம் இந்திய இளைஞர்கள் சோம்பேறிகளாக இருந்து வருவது வேதனையளிக்கிறது என்றும், சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டுவது வேதனை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

-நாகேந்திரன் வேலாயுதம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here