‘Tangkap Azam Baki’ பேரணியில் பட்டாசு வெடிப்பு: போலீசார் தீவிர விசாரணை

கோலாலம்பூர் :

கோலாலம்பூர் சோகோ (Sogo) வணிக வளாகத்திற்கு வெளியே இன்று நடைபெற்ற “Tangkap Azam Baki” பேரணியின் போது, திடீரென பட்டாசுகள் வெடித்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தத் திடீர் பட்டாசு வெடிப்புச் சத்தத்தால் பேரணியில் கலந்துகொண்ட போராட்டக்காரர்களிடையே சிறிது நேரம் பதற்றமும் சலசலப்பும் ஏற்பட்டது.

டாங் வாங்கி (Dang Wangi) மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் சாசாலி ஆடம் கூறுகையில், சனிக்கிழமை (ஏப்ரல் 25) பேரணி தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் கூட்டத்தின் பின்புறம் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் 1957-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் 6 மற்றும் 8-வது பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் சாதாரண பட்டாசுகளே பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. வெடிக்காத மற்றொரு பட்டாசுப் பொதியையும் (Pack) போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

“கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். இந்தப் பட்டாசுகளைக் கொளுத்திய நபர்களைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது பட்டாசு கொளுத்தப்பட்டதைக் நேரில் பார்த்தவர்கள் தாமாக முன்வந்து காவல்துறைக்கு உதவ வேண்டும்,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த விசாரணைக்கு உதவ, பேரணியில் பங்கேற்றவர்கள் அல்லது சுயாதீன சாட்சிகள் அழைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் கூட்டத்தை வழிநடத்தவும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் ஏசிபி சாசாலி உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here