இந்தியா, பாகிஸ்தான் அமைதி உடன்பாட்டுக்கு யார் காரணம்?

இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட ஐக்கிய அரபு அமீரகம் இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதராக செயல் பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003- ஆம் ஆண்டில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு பல்வேறு கால கட்டங்களில் சண்டை நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடுகள் எட்டப்பட்டன.

ஆனால் ஒப்பந்தம், உடன்பாடுகளை பாகிஸ்தான் மதிக்கவில்லை. காஷ்மீர் எல்லையில் அந்த நாட்டு ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

கடந்த 2019 பிப்ரவரி 14-  ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக அதே ஆண்டு பிப்ரவரி 26- ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்து, சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் பாகிஸ்தான் பின்வாங்கியது. இதன்பின் கடந்த 2019 ஆகஸ்ட் 5-  ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதன்பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக கடந்த பிப்ரவரி இறுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி சண்டை நிறுத்தம் தொடர்பாக இதுவரை மேற்கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் உறுதியுடன் கடைபிடிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இதன்பிறகு எல்லையில் இதுவரை தாக்குதல் நடைபெறவில்லை.

“இந்தியாவும் பாகிஸ்தானும் பழைய கசப்புணர்வுகளை மறந்து முன்னேறி செல்ல வேண்டும்” என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா பகிரங்கமாக அறிவுறுத்தியுள்ளார்.

“பாகிஸ்தானுடன் நட்பாக இருந்தால் மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியாவுக்கு நேரடி தொடர்பு கிடைக்கும்” என்று அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் வாயிலாக ஆறுதல் கூறியுள்ளார்.

கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்திய, பாகிஸ்தான் உறவில் இப்போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன்பின்னணியில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஐக்கிய அரபு அமீரக தூதர்கள் சில மாதங்களுக்கு முன்பே சமரச பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக அபுதாபிக்கு சென்றார்.

அங்கு அமீரக பட்டத்து இளவரசர் ஷேக் முகமதுவை சந்தித்துப் பேசினார். இதேபோல பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமத் குரேஷியும், அமீரக பட்டத்து இளவரசரை அபுதாபியில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

இறுதி கட்டமாக கடந்த பிப்ரவரி இறுதியில் ஐக்கிய அரபுஅமீரக வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இதில் முழுமையான உடன்பாடு எட்டப்பட்டது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here