இன்ஸ்டாகிராமில் அனுப்பிய தகவலை 15 நிமிடங்களுக்குள் இனி எடிட் செய்யலாம்

ன்ஸ்டாகிராம் பயனர்களுக்கான குறிப்பிடத்தக்க அப்டேட்டாக, அனுப்பிய தகவலை எடிட் செய்யும் வசதி அறிமுகமாகிறது. அதையும் குறிப்பிட்ட தடவைகள் வரை மேற்கொள்ள இன்ஸ்டாகிராம் அனுமதிக்கிறது.

சமூக ஊடக தளங்கள் போட்டியாளர்கள் மத்தியில் தங்களை தக்கவைத்துக் கொள்ளவும், பயனர்களை ஈர்க்கவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாரி வழங்குவது வழக்கம். இது பயனர்களின் சமூக ஊடக பயன்பாடுகளை எளிதாக்குவதோடு, குறிப்பிட்ட தளத்தின் பிணைப்பையும் அதிகமாக்குகிறது. அந்த வகையில், பிரபல இன்ஸ்டாகிராம் தளத்துக்கான அப்டேட் ஒன்றினை அதன் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டுள்ளது.

இதன்படி நாம் அனுப்பிய செய்திகளை அடுத்த 15 நிமிட காலக்கெடுவிற்குள் திருத்தும் வசதி அமலாகிறது. வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் ஏற்கனவே இருக்கும் இந்த அம்சம் இப்போது இன்ஸ்டாகிராமிலும் கிடைக்கும். சங்கடத்துக்குரிய மற்றும் தவறுகளுடனான தகவல் மட்டுமன்றி எழுத்துப் பிழை அல்லது மனமாற்றம் சார்ந்து எழும் திருத்தங்களையும், அனுப்பிய மெசேஜில் அடுத்த 15 நிமிடங்களுக்குள் மாற்றியமைத்து விடலாம்.

ஆனால் அப்படி திருத்தப்பட்ட தகவல்கள், அவை எடிட் செய்யப்பட்டது என்பதை தமது தலையில் சுமந்து வெளியாகும். இதன் மூலம் அதனை வாசிப்பவர் அது திருத்தப்பட்டது என்பதையும் உள்வாங்குவார். இந்த எடிட் வசதியைப் பெற, இன்ஸ்டாகிராமில் அண்மையில் அனுப்பிய தகவல் அல்லது உரையாடலை அணுக வேண்டும். குறிப்பிட்ட செய்தியை சற்று நேரம் அழுத்திப்பிடித்தால், வெளிப்படும் ஆப்ஷன்களில் எடிட் என்பதை தேர்வு செய்து, வேண்டிய திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

ஒருவேளை தகவலை பகிர்ந்து 15 நிமிடங்களுக்கு மேலாகி இருப்பின், இந்த எடிட் வசதி கிட்டாது. இந்த அவகாசத்துக்குள் எடிட் செய்து அனுப்பப்பட்ட மெசேஜ் அனைத்தும், எடிட் செய்யப்பட்டது என்ற லேபிளைத் தாங்கியிருக்கும். ஒருவேளை திருத்தப்பட்ட மெசேஜ் குறித்து எவரேனும் ரிப்போர்ட் அடித்தால், முந்தைய திருத்தங்களும் அதன் ஹிஸ்டரியுடன் வெளியாக வாய்ப்பாகும். இவ்வாறு குறிப்பிட்ட கால அவகாசத்தில் அனுப்பிய மெசேஜை 5 முறை எடிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here