டாக்கா: பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ஆம் ஆண்டில் பிரிந்து தனி நாடாக மாறியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த பற்றுதலின் அடிப்படையில், அந்த நாட்டின் சுதந்திர பொன் விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பினை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசம் சென்றார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் மோடி கடந்த ஓராண்டு காலமாக வெளிநாடு சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக வங்காளதேச சுற்றுப்பயணம் அமைந்தது.
பிரதமர் மோடி தனி விமானத்தில் நேற்று வங்காளதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் சென்று இறங்கினார். அங்கு அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் வந்து பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின் 1971-ஆம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப்போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும், அவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அந்நாட்டின் ஹூல்னா மாகாணம் சட்ஹூரா மாவட்டம் ஈஸ்வரிப்பூர் பகுதியில் உள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
காளி கோவிலில் வழிபாடு நடத்திய பின் செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த சக்திபீடத்தில் உள்ள காளி அம்மனை வழிபட எனக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனாவில் இருந்து மனிதகுலம் விடுபட வேண்டும் என காளி அம்மனிடம் நான் பிரார்த்தனை செய்தேன்.
காளி அம்மன் மேளா (கொடை விழா) இங்கு நடைபெறும்போது இந்தியாவில் இருந்தும் இங்கு வந்து பங்கேற்கின்றனர். இங்கு பல தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ஒரு சமூக நலக்கூடம் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. அப்போது தான் காளி பூஜை நிகழ்ச்சியின் போது இங்கு வருபவர்கள் தங்க வசதியாக இருக்கும் என்றார்.