சென்னை:
தமிழக பா.ஜ.,வின் டுவிட்டர் பக்கப் பதிவு ஒன்றில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியின் படத்தைப் போட்டு தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும் என குறிப்பிட்டிருந்தது சமூக ஊடகங்களில் கிண்டலுக்குள்ளாகியிருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வார பிரசாரம் களத்திலும், சமூக ஊடகங்களிலும் இது சூடு பிடித்துள்ளது. மோடி பிரதமரானதும் பா.ஜ., பிரசாரத்திற்கு தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியது. அந்த வகையில் தமிழக பா.ஜ.,வும் டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் கணக்கு தொடங்கி கட்சிக்கு ஆதரவான பதிவுகளை போடுவது, எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, கிண்டல் செய்வது போன்றவற்றை செய்து வருகின்றது.
தமிழக பா.ஜ., டுவிட்டர் பக்கத்தை தற்போது 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். 24 ஆயிரம் பதிவுகளை போட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தேர்தல் நேரம் என்பதால் தலைவர்களின் பேச்சு, அறிக்கை ஆகியவற்றை தொடர்ச்சியாக வெளியிடுகின்றனர். மக்களிடம் வாக்குகளையும் கேட்கின்றனர். அப்படி ஒரு பெண் பரதநாட்டிய கலைஞரின் புகைப்படத்தை போட்டு “தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும், வாக்களிப்பீர் தாமரை சின்னத்துக்கு” என குறிப்பிட்டிருந்தனர்.
அப்படம் தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட செம்மொழி கீதத்தில் இடம்பெற்றிருந்த பெண்ணின் உடையது. அவர் பிரதமர் மோடியையும், பா.ஜ.,வையும் கடுமையாக விமர்சிக்கும் ப.சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி ஆவார்.
இத்தகவல் வைரலானதும் அப்பதிவை தமிழக பா.ஜ., நீக்கிவிட்டது. இருந்தாலும் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு பலரும் பரப்பி வருகின்றனர். அதில் ஒரு பதிவிற்கு ஸ்ரீநிதி சிதம்பரமே பதிலளித்துள்ளார்.
“பா.ஜ., தங்களது பிரசாரத்திற்கு எனது படத்தை பயன்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் தாமரை என்றும் மலராது.” எனக் கூறியுள்ளார்.









