தமிழுக்கு எதிர்ப்பான உச்சக்கட்ட இழிசெயல்

சுடும் உண்மைகள்

கலைச்சொல்லாக்கம், திருக்குறள் வகுப்பு , பொங்கல் கையேடு முதலான தமிழ்ப்பணிகளைத் தடைசெய்ய வேண்டுமாம்.
உள்துறை அமைச்சில் தமிழ் அமைப்புகளுக்கு எதிர்ப்பாக முறைப்பாடு.

1. பாவேந்தரின் தமிழில் பிழையின்றி எழுதும் வழிகாட்டி நூல்
2. தமிழறிஞர் புலவர் குழந்தையின் நூல்கள்
3. தமிழறிஞர் சி. இலக்குவனாரின் நூல்கள்
4. செந்தமிழ் அந்தணர் புலவர் இளங்குமரனாரின் திருக்குறள் விளக்கவுரை முதலான தமிழ் நூல்களைப் பள்ளிகளில் தடைசெய்ய வேண்டுமாம்.
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் நடத்துகின்ற திருக்குறள் வகுப்புகளைத் தடைசெய்ய வேண்டுமாம்.

காலத்தின் தேவையாய் யாம் செய்யும் தமிழ்க் கலைச்சொல்லாக்கங்களையும் தடைசெய்ய வேண்டுமாம்.

தனி விளக்கங்களையும் அடையாளப்படுத்தி உள்துறை அமைச்சுக்கு. இந்து இயக்கங்களின் ஒருங்கிணைந்த குரல் (UMHV  ) எனும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவ்வமைப்புகளின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தனிப்பட்ட முறையில் செய்தி கசிய விட்டுள்ளார்.

பொங்கல் கையேடு தமிழ்க் காப்பகத்தால் உயர்ந்த நோக்கத்தில் வெளியிடப்பட்டது. பொங்கல் அனைத்துத் தரப்பினராலும் சமயங்கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு 2020 பொங்கல் தை முதல் நாள் சமய விழா எனக் கருதப்பட்டமையால் பள்ளிகளில் கொண்டாடுவதற்குச் சிக்கல் ஏற்பட்டதை முன்னிட்டு தமிழ்க்காப்பகம் பொங்கல் தமிழ்ப்பண்பாட்டு விழா என்பதை விளக்கி அதற்குரிய கையேடு ஒன்றினை அணியம் செய்து கல்வி அமைச்சின் பார்வைக்கு அனுப்பியது.

இதனைப் பெருஞ்சிக்கலாக்கி இந்து சமயத்திற்கு எதிர்ப்பானதாகத் திசைதிருப்பி விட்டதோடு நில்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ப்பாட நூல் ஒன்றில் வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய பாடப்பகுதி ஒன்றையும் முற்றிலுமாகப் பொய்யாகத் திரித்து பெரியார் தெய்வப்படங்களை செருப்பால் அடிப்பது போன்ற ஒரு பொய்ப்படத்தையும் இணைத்து மிக இழிவான வேலையை இந்து அமைப்புகளோடு தொடர்புடைய சிலர் செய்தனர்.

அப்படம் 1971ஆம் ஆண்டில் இவர்கள் உயர்வாகக் கருதும் துக்ளக் சோவால் வெளியிடப்பட்டதாகும். இப்பொய்யான இழிசெயலுக்காக சோ நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டதான பதிவு நீதிமன்றக் குறிப்பிலேயே உள்ளதாகும்.

தந்தை பெரியார் சமூக நீதிக்காகப் போராடிய பெருமகன். தமிழில் எழுத்துச் சீர்மையைச் செய்தவர். படிக்கும் மாணவர்கள் எழுத்துச் சீர்மை வரலாற்றை ஆராய்கின்ற வேளை கட்டாயம் பெரியாரைப் படிக்கவே செய்வர். இந்திய அரசாங்கம் அவரின் சிறப்புறுத்தும் வகையில் அவருக்கு அஞ்சல் தலையையே வெளியிட்டது.

வரலாற்றுக் கருத்தியல்களை யாரும் எவ்வகையிலும் பரவாமல் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஒன்றின் தேவை இருக்கும் வரையில் அது பற்றிய தேடல் கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும்.

இக்கால் உள்துறை அமைச்சில் செய்யப்பட்ட புகாரில் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரைப் பற்றிய தனிக்குறிப்புகளையும் வழங்கியுள்ளனராம். மலேசியாவை அவர்கள் இந்தியா என நினைத்து விட்டார்கள் போலும். உள்துறை அமைச்சின் அதிகாரிகள் இவர்கள் அறிக்கை விடுத்ததும் கண்ணை மூடிக்கொண்டு உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என இவர்கள் நினைத்து விட்டார்கள். எல்லாவற்றுக்கும் வரைமுறைகள் உண்டு என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள்.

திருமாவளவன் சிறு வயது முதலாகவே தமிழ் தமிழ் என்றே இயங்கி வருகின்றவர்.
தமிழில் அயற்சொற்கள் கலப்பு தமிழின் நலத்திற்குக் கேடு தருவன என்பதை உணர்ந்ததால் வடசொல், அயற்சொல் கலப்பு நீக்கியும் நல்ல கலைச்சொற்களை ஆக்கம் செய்து பயன்படுத்தியும் பரப்பியும் வருகின்றார்.

கலைச்சொல்லாக்கம் காலத்தின் தேவை. முன்னோர்கள் ஆக்கிய அருந்தமிழ்ச் சொற்கள் பல இன்று நடைமுறையில் உள்ளன. இக்கால் என் அறிவுக்கு எட்டிய சொல்லாக்கங்களை அவர் ஙெ்ய்து வருகின்றார். அவற்றைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் பயன்படுத்துவார் விருப்பத்தைப் பொறுத்தது.
இன்று உலகளாவிய நிலையில் அவரது ஆக்கங்கள் பரவியுள்ளன. இதன் முதன்மை, முகமை காலத்தால் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.
தமிழழிப்பு வேலைகளைச் செய்ய முனைவது இறைத்தன்மைக்கு நேர் எதிரானதாகும்…

திருக்குறளை தீக்குறள் எனக் கருத்துச் சொல்லி அதனை வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தக் கூடாது எனக் கூறியவர்களின் வழித்தோன்றல்கள் இன்று திருக்குறள் வகுப்பை நடத்தக்கூடாது எனக் கூறுவது வியப்பான ஒன்றல்ல என்றாலும் இவர்களின் ஆரியப்பண்பாட்டுக் கேடுகளை நிலைநிறுத்தச் செய்யும் பல்வேறு அழிச்சாட்டுச் செயல்களைத் தடுக்க வேண்டியது தமிழுணர்வாளர்களின் பொறுப்பாகும்.

இவர்களின் இத்தகு இழிசெயலால் தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்சார்ந்த பல பணிகள் பாதிக்கப்படலாம்.
தமிழாசிரியர்கள் பலர் அச்சுறுத்தப்படலாம்.

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here