பிரெஞ்சு தூதரை வெளியேற்ற வலியுறுத்தல்

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறை

.ஒரு போலீசார் உட்பட மூன்று பேர் பலி..!

பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் ஒரு இஸ்லாமியக் கட்சியின் தலைவரை அதிகாரிகள் கைது செய்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் ஒரு போலீஸ்காரரும் கொல்லப்பட்டனர் என்று மூத்த அதிகாரி, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 கைது செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-லாபியாக் பாகிஸ்தானின் தலைவர் சாத் ரிஸ்வியின் ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் கொல்லப்பட்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி குலாம் முகமது டோகர் தெரிவித்தார். லாகூர் அருகே ஷாஹத்ரா நகரில் நடந்த இந்த மோதல்களில் மேலும் பத்து போலீஸ்காரர்களும் காயமடைந்தனர்.

அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவாளர்களும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தின் நபி முகமதுவின் சித்தரிப்புகள் தொடர்பாக பிரான்சின் தூதரை அரசாங்கம் வெளியேற்றவில்லை என்றால் போராட்டங்களை நடத்துவதாக அச்சுறுத்தியதற்காக ரிஸ்வியை போலீசார் கைது செய்த பின்னர் நேற்று வன்முறை தொடங்கியது.

சட்டம் , ஒழுங்கை பேணுவதை நோக்கமாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டோகர் தெரிவித்துள்ளார். ஆனால் ரிஸ்வியின் தடுப்புக்காவல் விரைவில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வன்முறை போராட்டங்களைத் தூண்டியது. போராட்டக்காரர்கள் பல நகரங்களில் நெடுஞ்சாலைகளையும் சாலைகளையும் தடுத்தனர்.

பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கத்தை ரிஸ்வி ஓர் அறிக்கையில் மிரட்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகு கொடிய மோதல்கள் நடந்துள்ளன. பிப்ரவரி மாதம் தனது கட்சிக்கு பிரெஞ்சு தூதரை ஏப்ரல் 20’ஆம் தேதிக்கு முன்னர் வெளியேற்றுவதாக அவர் இம்ரான் கான் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமாறு ரிஸ்வி கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதில் மட்டுமே உறுதியாக இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. கைது செய்யப்படுவதற்கு எதிராக ரிஸ்வியின் ஆதரவாளர்களின் எதிர்வினை மிகவும் விரைவாக இருந்தது.

லாகூரில் காவல்துறையினரால் ஒரு முக்கிய நெடுஞ்சாலை , சாலைகளில் இருந்து போராட்டக்காரர்களை அகற்ற முடியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாகனங்களில் சிக்கிக்கொண்டனர். கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் இதையடுத்து மோதல்கள் ஆரம்பத்தில் வெடித்தன.

ரிஸ்வியின் ஆதரவாளர்கள் பின்னர் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் போலீசாருடன் மோதினர். அவர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகரில் தொடர்ந்து அணிவகுத்து, போக்குவரத்தை சீர்குலைத்து, குடியிருப்பாளர்களை சிரமத்திற்குள்ளாக்கினர்.

ரிஸ்வி தனது தந்தை காதிம் ஹுசைன் ரிஸ்வியின் திடீர் மரணத்திற்குப் பிறகு நவம்பரில் தெஹ்ரீக்-இ-லாபியாக் பாகிஸ்தான் கட்சியின் தலைவராக உருவெடுத்தார். நாட்டின் சர்ச்சைக்குரிய அவதூறு சட்டங்களை ரத்து செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் முன்னர் பாகிஸ்தானில் வன்முறை பேரணிகளை நடத்தியுள்ளனர்.

பிப்ரவரியில் ரிஸ்வியின் கட்சியுடன் அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிக்கவும், பிரெஞ்சு தூதரை வெளியேற்றவும் ரிஸ்வியின் கட்சி விரும்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here