மலேசிய வளங்களைப் பறிக்கும் அவலம்
ஜார்ஜ்டவுன்-
அந்நிய நாட்டு மீனவர்கள் மலேசிய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நம் நாட்டு மீன்களை அள்ளிச் செல்லும் செயலை மீன்வளத் துறை, மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவு தடுத்து நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெளிநாட்டு மீனவர்கள் நம் நாட்டின் நீரில் ஊடுருவுவதைத் தடுக்கும் முயற்சிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும், காரணம் மலேசிய மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
வெளிநாட்டு மீனவர்களால் திருடப்படும் நம் நாட்டின் நீரில் உள்ள மீன் வளங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் மீனவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், ஒட்டுமொத்தமாக மக்களின் தேவைகளுக்காக அந்த வளங்களை பராமரிப்பதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு மீனவர்களால் சுமார் 4.25 பில்லியன் வெள்ளி மதிப்பிலான கொள்ளையடிக்கப்படுகின்றது என்றார் அவர். இது சரிஙெ்ய்யப்படாவிட்டால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றார்.
எதிர்காலத்தில் இது மீன்வளத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும். மலேசிய மீன்வளத்துறையின் கூற்றுப்படி வெளிநாட்டு மீனவர்கள் நம் நாட்டின் கடல் உற்பத்திகளை அத்துமீறி கொள்ளையடித்திருப்பதும் இப்போது கொள்ளையடிக்கப்படுவதையும் விவரித்துள்ளது.
அதன் இயக்குநர் ஜெனரல் அகமட் தர்மிஸி ராம்லி கூறுகையில், நாட்டின் மீன்பிடி வளங்களை இழப்பதன் மதிப்பு வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களைக் கைப்பற்றுவது, அவர்களின் படகுகளில் இருந்து பறிமுதல் செய்வது குறித்தும் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தொகை மதிப்பீடு செய்யப்பட்டது என்றார்.
இந்த பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருவதால் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் தெரிவித்தார்.
இந்த வேண்டுகோள் பலமுறை விடுக்கப்பட்டிருந்தாலும் இன்றுவரை அது கடை பிடிக்கப்படாதது கவலையைத் தருகிறது. மலேசிய சட்டத்தின்படி, நாட்டின் படகுகளை ஆக்கிரமிக்கும் வெளிநாட்டு படகுகள், கப்பல்கள் மீது 1985 மீன்வளச் சட்டம் கீழ் வழக்குத் தொடரலாம், இது ஒவ்வொரு படகு உரிமையாளருக்கும் குற்றம் நிருபிக்கப்பட்டால் மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக அபராதம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் 100 வெள்ளி அபராதம் விதிக்கலாம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி படகுகள் அவற்றின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட வேண்டும் என்றும் பி.ப. சங்கம் கேட்டுக் கொள்கிறது.
செ.குணாளன்