நிதி எங்கே போகிறது – விழலைத்தேடி!

நாடு எங்கே போகிறது- விதியைத் தேடி!

அரசாங்கத்திடம் தற்போது போதுமான பணம் இல்லை. அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்டதன் பின்னணியில் கெட்ட நோக்கம் எதுவும் இல்லை என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்த ஈரம்கூட இன்னும் காயவில்லை.

ஆனால், அவரின் அமைச்சரவையில் 70ஆவது உறுப்பினராக ஒரு புதிய துணை அமைச்சர்  பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கோவிட்-19 தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து நான்காவது அலை ஆபத்திற்குச் சிவப்புக்கொடி காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒரு புதிய துணையமைச்சர் நியமனம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் மனத்தாலும் உணர்வாலும் கொதித்துப் போயிருக்கின்றனர். நேற்று பிற்பகல் 12.45 மணி வரை கிட்டத்தட்ட 37,000 டுவிட்கள் வழி மக்கள் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அரசாங்கத்தின் மீது கோபத்தைக் கொட்டித் தீர்த்திருக்கின்றனர்.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இது என்ன நாடா என்ற கேள்விகளால் அவர்கள் துளைத்தெடுத்தனர்.

நாடாளுமன்றம் கூட முடியாது; ஆனால் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தலாம், கோவிட்-19 தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; ஆனால், அரசாங்கம் அதனை மற்ற நாடுகளுக்குத் தருகிறது, அமைச்சர்களின் சம்பளம் விண்ணைத் தொடுகிறது; ஆனால் அவர்கள் (ஒரு சிலரைத் தவிர்த்து) என்னதான் வேலை ஙெ்ய்கிறார்கள் என்றே தெரியவில்லை என்று மக்கள் டுவிட்களில் நச்சு நச்சென்று கேள்விகளைத் தெறிக்கவிடுகின்றனர்.

நாட்டில் பணம் இல்லை என்று சொல்கிறார்கள்; ஆனால், நம்முடைய முன்னுரிமை எதற்கு என்பதும் புரியவில்லை! மக்கள் துன்பத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் நன்றாக சாப்பிட்டுவிட்டு சுகபோகமாக எப்படித் தூங்க முடிகிறது?

எல்லாமே பணம் தானா? பணத்தைக் கொண்டு சொர்க்கத்திற்கு டிக்கெட் வாங்க முடியுமா என்று ஒருவர் கோபமாக டுவிட் வழி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சபா பார்ட்டி சோலிடிராட்டி தானா ஆயர் கூ (ஸ்டார்) கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ குவான் டீ பின் சோ ஹோய் கலை, கலாச்சாரம், சுற்றுலாத்துறை துணை அமைச்சராக நேற்று அரண்மனையில் பதவி ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்னதாக அவர் செனட்டராக நியமனம் பெற்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவருக்கு இந்த அவசரகதியில் துணை அமைச்ங்ர் பதவி நியமனம் அவசியம் தானா? பல்வேறு பொருளாதார ஊக்கமளிப்பு ,  உதவித் திட்டங்களுக்கு 340 பில்லியன் (34,000 கோடி) வெள்ளியைச் செலவு செய்திருப்பதால் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று பிரதமர் சில தினங்களுக்கு முன்தான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மலேசியர்களுக்காக இதுவரை ஒன்றுமே செய்திராத ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் தரும் வகையில் துணை அமைச்சராக நியமனம் செய்திருப்பது மிகப் பெரிய விரயம் தானே!

ஏற்கெனவே, பல அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் கூகுளில் தேட வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய நியமனங்கள் பெரும் சுமை இல்லையா?

சில அமைச்சர்கள் தாங்கள் என்ன பொறுப்பில் இருக்கிறோம், என்ன வேலை செய்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் இருக்கும் பட்சத்தில், அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்ற காலகட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது; ஆனால், புதிய துணை அமைச்சரை நியமனம் செய்யலாமா?

இவையாவும்  இருந்து டுவிட்டரில் தெறிக்க விடப்பட்டிருக்கும் அண்மைய கேள்விக்கணைகள் ஆகும்.

இந்தக் கோபங்கள் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் மீது நெருப்புக் கனலாக மாறி வருகிறது என்பது சமூக வலைத்தளங்களில் குவிந்துவரும் மக்களின் மனக் குரல்கள் உறுதிப்படுத்துகின்றன.

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here