ஊழல் சதிராட்டம் உச்சகட்டமா?

IGP Tan Sri Hamid Bador during the press conference after handing over ceremony at Maktab Cheras . NORAFIFI EHSAN / The Star

 

சட்டம்  தன் கடமையைச் செய்யுமா?

அரசியலில் ஊழல் – நாட்டின் அரச மலேசிய போலீஸ் படையின் முதல் நிலைத் தலைவரிடமிருந்து வந்து விழுந்திருக்கும் ஒரு குற்றச்சாட்டு!

2021, மே 3ஆம் தேதி ஐஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர். பக்காத்தான் ஹராப்பான் 2018 பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

கண்ணியமும் நேர்மையும் உயர் நெறிகளும் மிக்க டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் தலைநிமிர்ந்து விடைபெற்றார். அவருக்கு நமது பாராட்டுகள். நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.

விடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன் போலீஸ் தலைமையகமான புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது உள்ளக் கிடக்கைகளை மனச்சாட்சியுடன் கொட்டித் தீர்த்தார்.

அரச மலேசிய போலீஸ் படையில் ஊழலை அடியோடு வேரறுக்க நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் அரசியலில் திரும்பும் பக்கம் எல்லாம் ஊழல் பரவிக் கிடப்பதைக் கண்டு மிரண்டு போயிருக்கிறேன்.

ஊழல் பற்றி அரசியல்வாதிகளுக்கு அக்கறையும் கவலையும் இல்லை. அதுபற்றி யோசிப்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை. அதிகாரப் போதை அவர்களின் கண்களை மறைக்கிறது. அங்கும் இங்குமாக மக்கள் பிரதிநிதிகளுக்கு வலை வீசுவது, வாங்குவது, மிரட்டிப் பணிய வைப்பது – இதற்குப் பெயர்தான் ஊழல் என்று பட்டவர்த்தனமாக உண்மைகளைப் போட்டு உடைத்தார் அவர்.

ஓர் ஐஜிபி இடமிருந்து வந்து விழுந்த வார்த்தைகள். இவை யாவும் மிக மிகக் கடுமையானவை. சிந்திக்க வைக்கக்கூடியவை. சட்ட அமலாக்கப் பிரிவினரின் கழுகுப் பார்வைக்குள் சிக்க வேண்டியவை.
சபா மாநில சட்டமன்றத் தேர்தலின்போது நிகழ்ந்த பேரங்கள், மிரட்டல்கள் இந்த அரசியல் ஊழல்களின் ஆட்டங்கள் என்ற உண்மை இப்போது விகாரமாக நம் கண்முன் காட்சி தருகின்றன.

அந்த மாநிலத்தில் வாரிசான் பிளஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தலைவர்கள் மிரட்டப்பட்டனர் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு வலை வீசப்பட்டது. எல்லாமே அரசியல் ஊழல் சதிராட்டங்கள்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

மாநில உள்நாட்டு வருமான வாரியம், எஸ்பிஆர்எம், இதர அமலாக்கப் பிரிவுகள் வழி இந்த மிரட்டல்களும் நெருக்குதல்களும் தரப்பட்டன. ஒரு மாண்புமிகு பின் தொடரப்பட்டு வீடு வரையில் உளவு பார்க்கப்பட்டிருக்கிறார்.

அடுத்த கட்டமாக உள்நாட்டு வருமான வாரிய அதிகாரிகள் அந்த மாண்புமிகுவின் வீட்டில் கால் பதித்திருக்கின்றனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உட்பட்ட அந்த மாண்புமிகு போலீசில் புகார் செய்யும் அளவுக்கு விவகாரம் விகாரமாகியது.

42 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த சபா முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்பி விடுதலையானார்.

நெருக்குதல், வாங்குதல், மிரட்டல் நடவடிக்கைகளின் வெள்ளோட்டமாக மூசா அமானின் எதிர்பாராத விடுதலை பார்க்கப்பட்டது.

விடுதலையாகிய சில நாட்களிலேயே மூசா அமான் தம் அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கினார். அப்போது ஆட்சியில் இருந்த வாரிசான் பிளஸ் கூட்டணியைச் சேர்ந்த வாரிசான், பிகேஆர், ஜசெக மக்கள் பிரதிநிதிகளுக்கு விலைபேசி கட்சி தாவச் செய்தார்.

குறுக்கு வழியில் சபா மாநில ஆட்சியைக் கைப்பற்றவும் முயற்சி செய்தார். ஆனால், அன்றைய முதலமைச்சரும் வாரிசான் தலைவருமான டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால், துணிந்து சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு திடீர்த் தேர்தல் நடத்தப்படுவதற்கு வித்திட்டார்.

மக்கள் பிரதிநிதிகளை வாங்கும் முயற்சி தொடர்பில் பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. ஆச்சரியம் – அதிர்ச்சி என்னவெனில்… எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என்பதுதான்.

கோலாலம்பூரில் இருந்து ஒரு முக்கியத் தலைவர் தனி ஜெட்டில் அடிக்கடி சபா வந்தார். திடீரென கட்சி தாவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக தலையெடுத்தன.

இதன் தொடர்பான போலீஸ் புகார்கள் எல்லாம் என்னவாயின? இன்றளவும் ஒரே மர்மமாகத்தான் இருக்கின்றன. அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் டான்ஸ்ரீ ஹமிட்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here