முன்னாள் தலைமையாசிரியர் வளர்மதி

 தொக்கோ குரு விருது பெற்றார்!

கோலாலம்பூர்-
கோலாலம்பூர் கூட்டரசு வளாக மாநில நிலையிலான தொக்கோ குரு 2020 விருது வழங்கும் நிகழ்ச்சி இயங்கலை வழி நடைபெற்றது. கோலாலம்பூர் கூட்டரசு வளாக மாநிலக் கல்வி இலாகாவின் 2020ஆம் ஆண்டின் தொக்கோ குரு விருதை முன்னாள் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி பா. வளர்மதி செல்வம் பெற்றார்.

எண்ணத்திலும் செயலிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிச் சென்ற திருமதி பா. வளர்மதி  செல்வத்திற்கு கல்வி இலாகாவின் இந்த அங்கீகாரம் காலத்தின் கட்டாயம்.

தேசியக் கல்விக் கொள்கைக்கு ஏற்ப, பள்ளியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, தமது பணிப்பாங்கினை மாற்றிக் கொண்டு புதிய கருத்துகளுக்கேற்ப தமது சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொண்டு முழுமையான ஆளுமைப் பண்பு கொண்ட புதிய சமூகத்தை உருவாக்கும் பெரும் பணியினைச் சலிக்காமல் செம்மையாக ஆற்றிச் சென்றவர் வளர்மதி.

தலைமையாசிரியர் வளர்மதி 1982ஆம் ஆண்டு பினாங்கிலுள்ள கிரியான் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். பிறகு கோலாலம்பூரில் செயின்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப்பள்ளியிலும் சிலாங்கூரில் அம்பாங் தமிழ்ப்பள்ளி, தாமான் கோசாஸ் தேசியப்பள்ளி, பத்துமலைத் தமிழ்ப்பள்ளி என ஏறத்தாழ 13 ஆண்டுகள் ஆசிரியர் பணியினைச் சிறப்பாக மேற்கொண்டார். அதன்பிறகு 1997ஆம் ஆண்டு கோலாலம்பூர் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பேற்று விவேகமாகப் பணியாற்றத் தொடங்கினார்.

ஏறத்தாழ 13 ஆண்டுகள் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி சேவைக்குப் பின் சில காலம் ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளியிலும் பணிபுரிந்து 7 ஆண்டுகள் செயின்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப்பள்ளியில் தொடர்ந்து பணியாற்றினார்.

தம் பணியில் சிறிதும் பிசகுநேராமல் செம்மையாகப் பவனிவந்த திருமதி பா. வளர்மதி, 2006ஆம் ஆண்டு திறன்மிகு தலைமையாசிரியர் என்கின்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் . தவிர, அவரின் பணி காலத்தில் சுமார் 4 முறை திறமையாகச் சேவையாற்றுதலுக்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இவர் இருமுறை கூட்டரசு வளாகத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டு, அப்பொறுப்பிற்கான கடமைகளையும் செவ்வனே ஆற்றி அனைவருக்கும் ஒரு முன்னோடியாகவே திகழ்ந்தார். 2017ஆம் ஆண்டு இவர்களின் நனிச்சேவையின் அடிப்படையில் தேசிய நிலையிலான தமிழாசிரியர் திலகம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த தலைமைப் பண்பாளர் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த 10ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2019இல் தம் உயிரினும் மேலாக நேசித்த ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

 

தி. மோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here