சிங்கப்பூர் கட்டுமானத் துறை பரிதவிக்கிறது!

 

தெற்காசிய ஊழியர்களுக்குத் தடையா!

கட்டுமானத் துறையை விடாமல் துரத்துகிறது, கொவிட்-19 கொள்ளைநோய். ஏற்கெனவே, கட்டுமானத் துறை சந்தித்து வந்த மனிதவளப் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வகையாக தெற்காசிய ஊழியர் தடைவிதிப்பு அமைந்தது.

இதனால், இரு மடங்கு சம்பளம் தருவதாகக் கூறி ஒரு சில கட்டுமான நிறுவனங்கள், தங்களின் மனிதவளப் பிரச்சினையைச் சமாளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

வேலையிட விபத்துகளும் அதிகரித்துள்ளன. இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 3,300 வேலையிட விபத்துகள் நேர்ந்தன.

கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 3,100 சம்பவங்கள் நடந்தன.

கிருமிப் பரவல் முறியடிப்புக் காலம் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து ஒரு வாரத்தில் சராசரியாக 1,000 கட்டுமான ஊழியர்கள் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டனர்.

அதிகரிக்கும் தொற்று சம்பவங்களைக் கட்டுப்படுத்த, எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. விட்டுச் சென்ற ஊழியர்களின் இடத்தை நிரப்ப நிறுவனங்கள் திண்டாடின.

மனிதவள அமைச்சு வழங்கியிருந்த தகவலின்படி, கட்டுமான, கடல்துறை, செயல்முறைத் தொழில்துறைகளில் டிசம்பர் 2019 இல் 370,100 வெளிநாட்டவர்கள் வேலை பார்த்தனர். ஆனால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 311,000 ஆகக் குறைந்தது.

கிருமி முறியடிப்புக் காலகட்டம் சென்ற ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்தபோது முக்கியமான உள்கட்டமைப்பு, கட்டடத் திட்டங்களுக்காக வேலைபார்க்க சுமார் 30,000 கட்டுமான ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் கட்டுமானத் துறையில் 50,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேவைப்படுவதாக துறைசார்ந்த பங்குதாரர்கள் மதிப்பிடுகின்றனர்.

பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்குமாறு கட்டுமானத் துறை மற்றும் கட்டடச் சூழல் பிரிவின் முக்கிய பிரதிநிதிகள் சென்ற வாரம் அரசாங்கத்திடன் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எல்லைகள் நீண்டகாலத்திற்கு மூடப்பட்டால் மனிதவளச் சவால்கள் மேலும் கடுமையாகிவிடும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

கட்டுமானத் திட்டங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடவேண்டும் என்ற அழுத்தமும் குத்தகைதாரர்கள் மீது உள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியர்களை வேலைக்கு அழைக்க வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

இதனால் ஊழியர்கள் மேலும் களைப்படையலாம். மேலும் அதிகச் சுகாதார, வேலையிட அபாயங்களுக்கு ஆளாகும் நிலையும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, மனிதவளத் தட்டுப்பாடைச் சமாளிக்கும் வகையில் சீனாவிலிருந்து வரும் ஊழியர்கள் தொடர்பிலான விதிகளைச் சென்ற மாதம் கட்டட, கட்டுமான ஆணையம் தளர்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here