சிங்கப்பூரில் வருமுன் காப்போம் திட்டத்தில் இதுவரை 185,000 பேர் சேர்ந்தனர்

சிங்கப்பூரர்களுக்கு நோய் வருமுன் தடுக்கும் உத்தியான மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி (ஹெல்தியர் எஸ்ஜி) செயல்திட்டத்தில் இதுவரை சுமார் 185,000 பேர் சேர்ந்து இருக்கிறார்கள்.

அன்றாடம் சராசரியாக சுமார் 3,000 பேர் அந்தச் செயல்திட்டத்தில் சேர்கிறார்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.இதுவரை சேர்ந்துள் ளோரில் நான்கில் மூன்று பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள். மற்றவர்கள் 40 வயது முதல் 59 வயது வரைப்பட்டவர்கள்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி செயல்திட்ட சாலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை கம்போங் அட்மிரட்டியில் நடந்தது.அதையொட்டி அமைச்சர் அந்தச் செயல்திட்டம் பற்றிய புதிய தகவல்களை ஊடகத்திடம் தெரிவித்தார்.தேசிய அளவிலான அந்தச் செயல்திட்டத்தை ஜூலை மாதம் சுகாதார அமைச்சு தொடங்கியது.

குடும்ப மருத்துவரின் உதவியுடன் சிங்கப்பூரர்கள் தங்கள் உடல்நலனுக்குத் தாங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுமாறு செய்வது செயல்திட்டத்தின் இலக்காகும்.திட்டத்தில் சேர்ந்து இருப்பவர்கள் தங்கள் குடும்ப மருத்துவருடன் சேர்ந்து உடல்நலத் திட்டம் ஒன்றைத் தீட்டுவார்கள்.

வாழ்க்கைப்பாணி மாற்றங்கள், காலக்கிரம முறைப்படி உடல்நலனைப் பரிசோதித் துக் கொள்வது உள்ளிட்ட பலவும் அந்த உடல்நலத் திட்டத்தில் உள்ளடங்கும்.மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி செயல்திட்டத்தில் சேர்வோர், ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக உடல்நலனைப் பரிசோதித்துக்கொள்ளலாம்.தேசிய அளவில் பரிந்துரைக் கப்படும் தடுப்பூசிகளையும் அவர்கள் இலவசமாகப் போட்டுக் கொள்ளலாம்.

செயல்திட்டத்தில் சேர்ந்துகொள்வோரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அது அவ்வளவு மோசமாக இல்லை. தொடக்கம் ஊக்கமூட்டுகிறது என்று அமைச்சர் தெரி வித்தார்.முதியோரையும் நெடுநாள் நோயாளிகளையும் செயல்திட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளும் வகையில் ஜூலை முதல் ஏறக்குறைய 500,000 குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு இருக்கின்றன என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.

இதில் தனியார் மருத்துவர்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். நோயாளிகள் தங்கள் மருந்தகங்களுக்கு வரும்போது அவர்களுக்கு ஆலோசனை கூறி செயல் திட்டத்தில் சேருமாறு மருத்துவர்கள் ஊக்கமூட்டுகிறார்கள் என்றார் அமைச்சர்.மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் சேர சுமார் 1,200 தனியார் மருத்துவர்கள் தகுதி பெற்று இருக்கிறார்கள். இதுவரை சுமார் 950 பேர் சேர்ந்து இருக்கிறார்கள் என்றும்  சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

அதாவது ஆறு தனியார் மருத்துவர்களில் ஐந்து பேர் சேர்ந்து இருக்கிறார்கள். இது நல்ல எண்ணிக்கைதான் என்றாரவர்.எஞ்சிய தனியார் மருத்துவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு அவர்கள் சேராமல் இருப்பதற்கான பல்வேறு காரணங்களுக்கும் தீர்வு காண அமைச்சு முயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனியார் மருத்துவர்களிடம் இருந்து வலுவான ஆதரவு கிடைத்து இருக்கிறது. நிர்வாக நடைமுறை தொடர்பில் பல விவரங்களை அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.அவை தொடர்பில் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்றும் திரு ஓங் குறிப்பிட்டார். இந்தப் பங்காளித்துவ உறவு நீண்டகாலப்போக்கில் ஆனது என்றும் இது நல்ல பலனைத் தரக்கூடியது என்றும் கொவிட்-19 தொற்று காலத்தின்போது இது தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி தூதுவர்கள் பற்றி கருத்து கூறிய அமைச்சர், இவர் களின் முக்கியமான பணி முதியோரை இந்தச் செயல்திட்டத்தில் சேருமாறு செய்வதுதான் என்றார்.இதில் மேலும் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. அதாவது முதியோரைச் சமூகத்தின் ஓர் அங்கமாக ஆக்குவதுதான் அது என்று அமைச்சர் தெரிவித்தார்.

வீட்டில் இருந்து வெளியே வந்து சமூகக் குழுக்களில் முதியோரை ஈடுபடுத்துவது முக்கியமான நோக்கம் என்று அவர் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here