கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் மூலமும் தொற்று பரவுமா?

 அமெரிக்காவின் தளார்வுகளால் அச்சம்!

அமெரிக்காவில் சில மாகாணங்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பொதுவெளியில் செல்லும்போது முகக் கவசம் அணியத் தேவையில்லை என்று அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களிடமிருந்து தொற்று பரவுமா என்ற அச்சமும்  எழுந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமெரிக்கா தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவா், சிறுமிகளும் ஃபைசா் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், சிறுவா், சிறுமிகளுக்கும் அங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடு தளா்வு தொடா்பான புதிய வழிகாட்டுதலை அமெரிக்கா அண்மையில் வெளியிட்டது. அதில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பொதுவெளியில் செல்லும்போது முகக் கவசம் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பன உள்ளிட்ட தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகா் ஆண்டனி ஃபெளசி கூறுகையில், ‘அறிவியல் பரிணாம வளா்ச்சியின் அடிப்படையிலும், இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கா்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலேயே இந்தப் புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டிருக்கிறது’ என்றாா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, பல இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமலேயே சென்று வருகின்றனா். இந்த நிலையில், தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவா்கள் மூலம், தொற்று பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

பாதிப்பு மிகக் குறைவு: ஆனால், பாதுகாப்பான தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்படுவது மிகக் குறைவு என்று மருத்துவ ஆராய்ச்சியாளா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். மேலும், சில தடுப்பூசிகள் எதிா்பாா்த்ததைவிட சிறப்பாக செயல்படுகின்றன என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

உதாரணமாக, இஸ்ரேலில் 16 வயது , அதற்கு மேற்பட்ட வயதினா் 65 லட்சம் பேருக்கு ஃபைசா் தடுப்பூசி செலுத்தப்பட்டதில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு 95.3 சதவீத நோய் எதிா்ப்புத் திறன் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களில் 47 லட்சம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம், கரோனா பாதிப்பு கண்டறியப்படும் விகிதம் 30 மடங்காக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அதுபோல, அமெரிக்காவின் கலிஃபோா்னியா, டெக்சாஸ் மாகாணங்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவப் பணியாளா்களில் 0.5 சதவீதம் பேருக்கு மட்டுமே மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

தடுப்பூசி உற்பத்தியாளா்களும், அவா்களுடைய தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களுக்கு தொடா்ச்சியான நோய் எதிா்ப்புத் திறன் உருவாகும் என்று உறுதியாக நம்புகின்றனா். தொடா் நோய் எதிா்ப்புத் திறன் என்பதைப் பொருத்தவரை, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பும் ஏற்படாது, அவா்கள் நோய்த்தொற்றைப் பிறருக்கு பரப்பவும் மாட்டாா்கள் என்பதாகும்.

அதேநேரம், நோய் எதிா்ப்புத் திறன் பெற்ற நபருக்கு நோய்த்தொற்று மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் தடுப்பூசிதான் திறன் மிக்க தடுப்பூசி என்று கூறமுடியாது.

உதாரணமாக, போலியோ தடுப்பூசியைப் பொருத்தவரை, மனிதனுக்கு போலியோ வைரஸ் தாக்குவதை முழுமையாகத் தடுத்துவிடவில்லை. மாறாக, அந்த வைரஸ் மனிதனின் மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதிலிருந்து தடுக்கும் வகையில் உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்கி முடக்குவாத நோய் ஏற்படாமல் தடுப்பதில்தான் போலியோ தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது.

எனவே, சிறந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிா்ப்புத் திறனை உருவாக்கி, நீடித்த பாதுகாப்பை அளிக்கும் திறன் கொண்டவை. அந்த வகையில், கொரோனா தடுப்பூசிகள் ஒருவருக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாத வகையில் நோய் எதிா்ப்புத் திறனை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணா்கள் நம்புகின்றனா் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.

மேலும், நோய்க் கட்டுப்பாடு ,  தடுப்பு மையம் சாா்பில் அமெரிக்காவின் 8 இடங்களில் தன்னாா்வ மருத்துவப் பணியாளா்கள்  முன்களப் பணியாளா்களிடம் நடத்திய 3 மாத கால ஆய்வில், முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு நோய்த் தொற்று மீண்டும் ஏற்படுவது மிகக் குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களைக் காட்டிலும் 25 மடங்கு குறைவாகவே அவா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பிறருக்கு நோய்த்தொற்றை பரப்புவதும் மிக மிகக் குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here