உலகெங்கும் வேகமாகப் பரவும் பி1617 கிருமி

உலகெங்கும் மிக வேகமாக பி1617 எனும் உருமாறிய கொவிட்-19 கிருமி வகை பரவி வருவதாகவும் அதன் பாதிப்பு அதிகரிப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலை நீடித்தால் கிருமித்தொற்று நெருக்கடிநிலை தற்போதைய நிலையைவிட இன்னும் மோசமான நிலையை எட்டக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கொவிட்-19 சூழலை அண்மையில் மறுஆய்வு செய்த மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கோவிட்-19 கிருமி  உருமாற்றம் தொடரும் என்று அவர்கள் கூறுகின்றனர். மக்களிடையே பி1617 கிருமி வகை மிக வேகமாகவும் பரவலாகவும் பரவக்கூடியது. இதன் விளைவாக பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணிகள் பெரும்பாலான நேரங்களில் சவால்மிக்கதாகி உள்ளன.

“இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. உலக மக்கள் இதற்கு முன் காணாத மிக மோசமான கிருமித்தொற்று நெருக்கடிநிலையை பி1617 கிருமி வகை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது,” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹொக் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here