“நீறில்லா நெற்றி பாழ்” என்கிறார் திருமூலர். மக்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச்செய்து அல்லது வலுவிழக்கச் செய்து வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் திருநீறென்று அழைக்கப்படுகிறது.
இதனை பொதுவாக விபூதி என்று அழைப்பர். திருநீறினை பூசிய உடலை சிவாலயத்திற்க்கு சமமானது என்பர். அறிவியல் ரீதியாக பார்க்கும் போது திருநீறானது நம்மைச் சுற்றியுள்ள நேர்மறையான (positive energy) எண்ணங்களை கவர்ந்து எடுத்து உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியதாகும்.
இப்பொழுது திருநீறு எவ்வாறு அணிவது என்று பார்ப்போம். வடக்கு அல்லது கிழக்கு பக்கம் பார்த்தவாறு நின்றுகொண்டு, ஐந்தெழுத்து மந்திரமான “நமசிவாய அல்லது சிவாயநம” என்று சிவனது பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தவாறு பூசுதல் வேண்டும்.
கட்டைவிரலால் திரு நீறையணிந்தால் தீராத நோய் வரும், ஆட்காட்டி விரலால் தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசமாகும், நடுவிரலால் அணிந்தால் நிம்மதியின்மை உண்டாகும், மோதிரவிரலால் அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும், சுண்டுவிரலால் திருநீறணிந்தால் கிரகதோஷம் உண்டாகும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் மோதிர விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் அணிந்து கொண்டால் இவ்வுலகமே வசப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இவ்விபூதி அணிவதற்கு காலம் நேரம் என்று எதுவும் வரையறை இல்லை. நீங்கள் எந்நேரத்திலும் இறைவனை வணங்கி திருநீற்றினை அணிந்து கொள்ளலாம் என்கின்றன இந்து சமய கோட்பாடுகள்.