பெட்டாலிங் ஜெயா (ஜூன் 21) : கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வீடுகளில் இருந்தே இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் (oxygen) அளவினை பரிசோதிக்கும் நாடித் துடிப்பு ஆக்சிமீட்டர்களை வாங்க விரும்பும் மலேசியர்கள் மருத்துவ சாதன ஆணையத்தால் (MDA) சான்றிதழ் பெற்றவர்களிடம் மட்டுமே பெற வேண்டும் என்று மருந்தாளர்கள் (Pharmacists) கூறுகின்றனர்.
ஆன்லைனில் விற்கப்படும் மருத்துவ அளவீடுகளை அளவிடும் கருவிகள் அனைத்தும் MDA இல் கண்டிப்பாக பதிவு செய்திருத்தல் அவசியம் என்று மலேசிய மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் அம்ராஹி புவாங் குறிப்பிட்டார்.
இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவை அளவிடும் ஆக்சிமீட்டர்களின் விற்பனை அடிப்படையில் நோக்கும்போது, நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர்களின் விற்பனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விற்பனை குறிப்பாக வலுவாக இருந்தது என்றும் ஆனால் இந்த மாதத்தில் மந்தமாகவே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மருத்துவ அளவீட்டு சாதனங்களை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று மருந்தாளுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இது பயனர்களுக்கு கொள்முதல் பின்னர் , சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய நேரடி ஆலோசனையையும், மிகவும் துல்லியமான வாசிப்பையும் உறுதி செய்ய உதவும் என்றும் அம்ராஹி புவாங் தெரிவித்தார்.
அனைத்து வீடுகளிலும் நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர்களை வாங்க முடியாது என்பதால், சில நிறுவனங்கள் இந்த சாதனத்தை இலவசமாக வழங்குகின்றன என்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க இது உதவுகிறது என்று மேலும் கூறினார்.
கடந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வகை 4 மற்றும் 5 கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணிகளில் “ஹேப்பி ஹைபோக்ஸியா (happy hypoxia) இருப்பதாக சுகாதார அமைச்சகம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.
ஹேப்பி ஹைபோக்ஸியாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குறைந்த அளவு ஆக்சிஜன் இருக்கும், ஆனால் அவர்கள் சுவாச சிரமங்களை அனுபவிப்பதில்லை.
ஒரு சாதாரண ஆக்சிஜனின் அளவு 95% முதல் 100% வரை இருக்கும், அதற்குக் கீழே வரும் விழுக்காடு அனைத்தும் ஆக்சிஜன் குறைவாகவே கருதப்படுகிறது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, அதன் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில், இந்த நிலையின் அறிகுறிகளில் அல்லது ஆக்சிஜன் அளவு 91% க்கும் குறைவாக இருக்கும்போது சுவாசக் கஷ்டங்கள், தலைவலி, தலைச்சுற்றல், தோல் நீலநிறமாக மாறும் மற்றும் உள்ளங்கைகள் குளிர்ந்த நிலையில் இருப்பது போன்ற அறிகுறிகள் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.