தூக்குமேடையை இடிக்க எதிர்ப்பு

மராட்டிய மன்னர் கால நினைவிடமாம்!

தஞ்சாவூரில் 200 ஆண்டுகள் பழமையான மராட்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தூக்குமேடையை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் பின்புறம் சேவப்பநாயக்கன் ஏரி மேல் கரையில் 200 ஆண்டுகள் பழமையான தூக்குமேடை உள்ளது.

தரையிலிருந்து 10 அடி உயரத்தில் செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் கலவையால் 200 அடி நீளத்திலும் 30 அடி அகலத்திலும் இந்த தூக்குமேடை கட்டப்பட்டுள்ளது. தற்போது மேற்கூரை ஏதும் இல்லாமல் வெறும் கட்டடம் மட்டும் எஞ்சியுள்ளது.

இந்த தூக்குமேடை கட்டுமானத்தை நேற்று சிலர் இடிக்க வந்தனர். இதையடுத்து அங்கு திரண்டு வந்த அப்பகுதி மக்கள், தூக்குமேடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, இடிக்கும் பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரிய கோயில் மீட்புக்குழு பொருளாளர் பழ.ராசேந்திரன், தூக்குமேடை அமைந்துள்ள வீட்டின் அருகே வசிக்கும் பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

மராட்டிய மன்னர் காலத்தில் கொடுமையான குற்றங்களை செய்தவர்களை தூக்கு மேடையில் ஏற்றி கொல்லும் வழக்கம் இருந்துள்ளது. தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்கள் இந்த தூக்குமேடையை பயன்படுத்தியுள்ளனர்.

காலப்போக்கில் தூக்குமேடை பயன்படுத்தாமல் இருந்ததால், தற்போது கட்டுமானம் மட்டும் எஞ்சியுள்ளது.

இந்த தூக்குமேடையை யாரும் ஆக்கிரமிக்காதவாறு அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று திடீரென சிலர் அங்கு வந்து இந்த இடம் எங்களுக்கு உரியது எனக்கூறி, அதை இடித்து அகற்ற முயற்சி செய்தனர். இதை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம்.

மேலும், இந்த இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, எஞ்சியுள்ள கட்டுமானத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here