நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்தல்!
ஆகஸ்டு முதல் தேதிக்குப் பிறகும் அவங்ரகாலப் பிரகடனத்தை
நீட்டிக்கக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணி தேசியத் தலைவர் மன்றம் நேற்று மீண்டும் வலியுறுத்தியது.
கடந்த ஜனவரி 11ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட அவசரகாலப் பிரகடனம் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஆகவே அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணி வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அறிவியல் சான்றுகள், தரவுகள் அடிப்படையில் பார்க்கும்போது கோவிட்-19 நெருக்கடி மேலும் மோசமடைகிறது. அவசரகாலப் பிரகடனம் கொண்டுவரப்பட்டது முதல் நிலைமை மேலும் மோசமடைவதைக் காண முடிகிறது.
தினசரி கோவிட்-19 தொற்றுப் பரவலும் மரண எண்ணிக்கையும் இன்னும் அதிகமாகவே உள்ளது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தேசியத் தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவசரகாலப் பிரகடனம் மீதான சுயேட்சை சிறப்புக்குழு ஜூலையில் தனது இறுதிக்கூட்டத்தை நடத்தவுள்ளது. அவசரகாலப் பிரகடனம் தொடர்பில் மலாய் ஆட்சியாளர்கள் முன்வைத்திருக்கும் கருத்துகளுக்கு அந்தக் குழு கட்டுப்பட வேண்டும் என்று அதில் இடம்பெற்றுள்ள நம்பிக்கைக் கூட்டணியின் பிரதிநிதிகள் வலியுறுத்துவார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் அவசரகாலப் பிரகடனம் எந்தவிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆகவே, ஆகஸ்டு முதல் தேதிக்குப் பிறகும் அவசரகாலப் பிரகடனத்தை நீட்டிக்க வேண்டாம் என்று மாமன்னருக்கு அந்தக் குழு ஆலோசனை கூற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தக் குழு ஆகஸ்டு முதல் தேதிக்குப் பிறகு கலைக்கப்படும்.








