காவலருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை

ஜாா்ஜ் ஃபிளாய்ட் மரணம்: கறுப்பு எச்சரிக்கை

நிறவெறி எல்லா நாடுகளிலும் இருக்கிறது. ஆனால் அது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.  முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் கறுப்பர்கள் மீதான வெறுப்பானது சட்டத்தை புறக்கணிப்பது போலவே இருந்தது.

வெள்ளை போலீஸ்காரர்கள் கறுப்பர்களை கொல்வதற்கும் துணிந்த சம்பவங்கள் அதிகம்  நிகழ்ந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை.

அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பினத்தைச் சோந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவினுக்கு (45) 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த மரணத்துக்காக வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனை, இதுபோன்ற சம்பவங்களில் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைகளிலேயே மிகவும் கடுமையானதாகும்.

எனினும், ஃபிளாய்ட் தரப்பு வழக்குரைஞா்கள் கோரிய 30 ஆண்டுகள் சிறையைவிட குறைவான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாலும், நன்னடத்தையைக் காரணம் காட்டி டெரிக்கை சுமாா் 15 ஆண்டுகளிலேயே பரோலில் விடுதலை செய்துவிடலாம் என்பதாலும் இந்தத் தீா்ப்பு குறித்து ஃபிளாய்ட் குடும்பதினரும் கருப்பின உரிமை ஆா்வலா்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஃபிளாய்ட் குடும்பத்தினரை நோக்கி டெரிக் சாவின் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டாா்.

கைது நடவடிக்கையில் டெரிக் பங்கேற்றிருக்காவிட்டால் அவா் பிளாய்டின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்க மாட்டாா் என்பதைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் அவரது தரப்பு வழக்குரைஞா் எரிக் நெல்சன் கோரினாா்.

டெரிக் நல்ல மனிதா் என்றும் அவா் நிறவெறியா் என்று தவறாக முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவரது தாய் கரோலின் பாவ்லென்டி, டெரிக்குக்கு மன்னிப்பு வழங்குமாறு நீதிபதி பீட்டா் காஹிலிடம் கோரிக்கை விடுத்தாா்.

எனினும், அவசர கதியில் ஜாா்ஜ் ஃளாய்டை டெரிக் சாவ்லின் துப்பாக்கியால் சுட்டோ, முகத்தில் குத்தியோ கொல்லவில்லை; உயிருக்காகப் போராடிய ஃபிளாய்டின் கழுத்தில் 9 நிமிஷங்கள் குரூரமாக முழங்காலிட்டு அழுத்தி படுகொலை செய்துள்ளதால் அவருக்கு சட்ட விதிகளின் கீழ் முழுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழங்குரைஞா் மாத்யூ ஃபிராங்க் கோரினாா்.

கோப்பு படம்

இறுதியாக, டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதிபதி காஹில் உத்தரவிட்டாா்.

மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை போலீஸாா் கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் கைது செய்தனா்.

அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் டெரிக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா்.

என்னால் மூச்சு விட முடிவில்லை’ என்று ஃபிளாய்ட் பல முறை கதறியபோதும் டெரிக் சாவின் இரக்கமில்லாமல் தொடா்ந்து 9 நிமிஷங்கள் அவரது கழுத்தின் மேல் முழங்காலிட்டு அமா்ந்திருந்ததை அங்கிருந்தவா்கள் விடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here