திறப்பு விழாவுக்கு தயாராகும் மல்டி லெவல் பார்க்கிங்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே நிர்மாணிப்பு

ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தம் (மல்டி லெவல் பார்க்கிங்) திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகள் நடக்கின்றன. இதில் திட்டமிடப்பட்ட வகையில் எந்த திட்டமும் சிறப்பாக வரவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவுபெற்றால் மதுரை மாநகரம் புதுப்பொலிவு பெறும் என கூறப்பட்டது. ஆனால் தோராயமாக 80 சதவீதம் வரை நிறைவுபெற்றுள்ள நிலையில் இன்னும் மதுரை புதுப்பொலிவு பெறவில்லை.

மீனாட்சியம்மன் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தக் கட்டுமானப் பணி முடிந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

ரூ.42 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மல்டி லெவல் பார்க்கிங்கில் 110 நான்கு சக்கர வாகனங்கள், 1,400 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தலாம்.

விரைவில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீனாட்சியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்குவார்கள். எனவே வாகன நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வாகன நிறுத்தத்தில் கடைகள்

மேலும் இங்கு 120 புராதானப் பொருட்கள் விற்பனை கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைக்காரர்களின் வாகனங்களும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களும் நிறுத்துவதற்கே இந்த வாகன நிறுத்தத்தின் பெரும்பகுதி இடங்கள் சென்றுவிட வாய்ப்புள்ளது.

அதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களுக்கு போதுமான இடமிருக்குமா அல்லது எப்போதும் போல் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தொடருமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here