தாபுங் ஹாஜி விவகாரம்: அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Screenshot

கோலாலம்பூர்:

Lembaga Tabung Haji நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை, நாளை (செவ்வாய்க்கிழமை) கூடும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்திற்கான இந்த 211 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை மக்களவையில் சமர்ப்பித்து, பிரதமர் துறை (சமய விவகாரங்கள்) துணை அமைச்சர் டத்தோ டாக்டர் சுல்கிப்ளி ஹசான் விளக்கம் அளிக்கவுள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு வெளியிட்ட காணொளிப் பதிவில் பேசிய அவர், விவாதத்தின் முடிவில் தாமும் இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசானும் விவாதத் தொகுப்புரையை வழங்குவர் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சரவை உறுதியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில், கடந்த ஜூலை 29-ஆம் தேதி அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் மீதான காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கக் குறைந்தபட்சம் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here