கனடாவில் வரலாறு காணாத வெப்பம்; கடந்த 4 நாட்களில் 134 பேர் மரணம்

கனடா, ( ஜூன் 30) :

கனடாவில் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்பத்தால், கடந்த 4 நாட்களில் 134 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

பெரும்பான்மையான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

கடும் வெப்பத்தை தாங்க முடியாமல்  கடந்த 4 நாட்களில் 134 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குளிர்ச்சியான இடங்களுக்கு இடம்பெயருமாறு பொதுமக்களை மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் கொலம்பியா மாநில தலைவர் ஜான் ஹோர்கன் தெரிவித்ததாவது, இது நாங்கள் எதிர்பாராத வெப்ப அலை. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுகளை மக்கள் அறிந்துள்ளனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ளும் வழிமுறைகளை ஏற்கனவே பெரும்பாலான மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர். நாங்களும் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றோம் என குறிப்பிட்டார்.

கடும் வெப்பம் எதிரொலியாக பகல் நேரத்தில் வெளியே வருவதை பிரிட்டிஷ் கொலம்பியா மாநில மக்கள் தவிர்த்து வருகின்றனர். அமெரிக்காவிலும் போர்ட்லான்ட், ஆரிகான், சியாட்டல், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் வறுத்தெடுத்து வருகிறது. போர்ட்லான்ட்டில் 115 டிகிரி பாரன்ஹீட்டும், சியாட்டலில் 110 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியிருக்கிறது.

இந்த வெப்பநிலை முன்னெப்போதும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here