கலைந்து போகுமோ  கனவு ?

ஓப்பந்த மருத்துவர்கள் ஓயப்போவதில்லை!

இளம் ஒப்பந்த மருத்துவர்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவது இல்லை. மாறாகத் தங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆட்சேப மறியலாகத்தான் இருக்கப் போகிறது.
2021 ஜூலை 1ஆம் தேதியில் இருந்து ஜூலை 12ஆம் தேதி வரையில் ஒரு கறுப்பு குறியீட்டு வழி அவர்களின் இந்த நூதனப் போராட்டம் நடைபெற உள்ளது. இது மருத்துவமனையில் ஓர் அவசரகால நிலையாகவே பார்க்கப்பட இருக்கிறது.

கீ கி ஹான் என்ற புனைபெயர் கொண்ட டாக்டர் ஹான் இவ்விவகாரத்தில் சில ஆத்மார்த்தமான உண்மைகளை ஒரு காணொளி வழி பகிர்ந்துகொண்டுள்ளார். அக்காணொளி தற்போது தீயாகப் பரவி வருகிறது. சுடும் உண்மைகளாக அவரின் தகவல்கள் பார்ப்போரின் இதயங்களில் பதிந்து வருகின்றன.

இந்த இளம் ஒப்பந்த மருத்துவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆணிவேராக இருக்கின்ற காரணம், பின்னணி, வரலாறு ஆகியவற்றை நாம் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் 1960 இல் இருந்து 1980 வரை மலாயா பல்கலைக்கழகம் , மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் , மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்  ஆகிய 3 அரசாங்க பல்கலைக்கழகங்கள்தான் இருந்தன.

1995இல் இருந்து 2000ஆம் ஆண்டுக்குள் – 5 ஆண்டுகளில் அது 10 ஆக உயர்வுகண்டது. 6 அரசுப் பல்கலைக்கழகங்கள், 4 தனியார் பல்கலைக்கழகங்கள்.

2002 இல் இருந்து 2012 க்குள் 10 ஆண்டுகளில் நாட்டில் 33 பல்கலைக்கழகங்கள் மருத்துவப் படிப்பை வழங்கின. 3இல் தொடங்கியது காலவோட்டத்தில் 33 ஆக அதிகரித்தது.

இந்நிலைக்கு யார் காரணம்? இந்த எண்ணிக்கை அதிகரிப்பால் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆண்டுதோறும் அவர்களின் எண்ணிக்கை ஏறுமுகமாகத்தானே இருந்திருக்கிறது!

குறுகிய காலகட்டத்தில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை இமாலய உயரத்திற்கு அதிகரித்தது. இதற்கு யார் காரணம் – பொறுப்பு?
ஆனால், அதே சமயத்தில் அரசாங்க மருத்துவமனைகள், அரசாங்க கிளினிக்குகள், மருத்துவமனை கட்டில்களின் எண்ணிக்கை இந்த மாணவர்கள் அதிகரிப்புக்கு ஈடாக அதிகரிக்கப்படவில்லையே!

இந்நிலையில் அரசாங்க டாக்டர்கள், அரசாங்க மருத்துவ அதிகாரிகள்,  நிரம்பி வழிகின்றனர். பிரச்சினைகளும் சிக்கல்களும் கூடவே தலையெடுத்திருக்கின்றன.

இப்பிரச்சினையை எதிர்நோக்கிய அரசாங்கம் அதற்கான  சிக்கலுக்குக்  தீர்வு காண்பதற்குப் பதிலாக, இப்போதைக்குத் தலைவலி போனால் போதும் என்ற மனப்போக்குடன் தற்காலிகத் தீர்வு மட்டும் கண்டனர்.

ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் என்பதுதான் அந்தத் தற்காலிகத் தீர்வு. புதிய பட்டதாரி டாக்டர்கள் அரசாங்க சேவைக்குள் நுழையும் ஒப்பந்த டாக்டர் என்று முத்திரை குத்தப்படுகிறது.

2016க்கு முன் அரசாங்க கட்டாய சேவை நிபந்தனையின் கீழ் புதிய மருத்துவப் பட்டதாரிகள் அரசாங்க மருத்துவச் சேவையில் நிரந்தர அதிகாரிகளாக அங்கீகரிக்கப்பட்டனர். ஓர் அரசாங்கப் பணியாளருக்குக் கிடைக்கக்கூடிய எல்லாச் சலுகைகளையும் அவர்கள் அனுபவித்தனர்.

ஆனால், 2016க்குப் பின் நிலைமை தலைகீழாக மாறிப்போனது. புதிய மருத்துவப் பட்டதாரிகள் ஒப்பந்த சுகாதாரப் பணியாளர் – Contract Health Worker என்று முத்திரை குத்தப்பட்டனர். எல்லாச் சலுகைகளும் அப்படியே மாயமாக மறைந்துபோயின.

பல் மருத்துவம், மருந்தகம் (பார்மசி) போன்ற துறைகளில் படித்துப் பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகளுக்கு இதே நிலைதான்.

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here