ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் மீது வழக்கு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடுத்தார்

ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் ஆகிய சமூக ஊடங்களுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். அவ்வப்போது சமூக ஊடகங்களில் எதாவது சர்ச்சைக்குரிய அல்லது தவறான தகவல்களை டிரம்ப் வெளிப்படுத்துவதும் அதன் காரணமாக சமூக ஊடகங்கள் அவரது பதிவை நீக்குவதுமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். ஆதரவாளர்களை தூண்டும் விதமாக பதிவிட்டதாக கூறி டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கு அந்நிறுவனம் நிரந்தர தடை விதித்தது. இதேபோல், ஃபேஸ்புக்கை பயன்படுத்த டிரம்பிற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தடை உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது,

ஜனவரி மாத வன்முறை காரணமாக கூகுளின் ஒரு அங்கமான யூ டியூபும் டிரம்பின் வீடியோக்களை முடக்கியது.

இந்நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்களுக்கு எதிராக ஃபுலோரிடா நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார். பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க், ட்விட்டரின் ஜாக் டோர்சி மற்றும் கூகிளின் சுந்தர் பிச்சாய் ஆகியோரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளார். தன்னை தவறாக கண்காணித்ததாகவும் அந்தந்த தளங்களில் செயல்படுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் தனது முதல் திருத்த உரிமைகளை அவர்கள் மீறினர் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். மீண்டும் தனது கணக்குகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here