போலி மைகாட் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்தோனேசிய பெண்ணுக்கு 14,000 வெள்ளி அபராதம்

ஜார்ஜ் டவுன், ஜூலை 22:

போலி மைகாட்டை பயன்படுத்திய குற்றத்திற்காக இந்தோனேசிய பெண் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 14,000 வெள்ளி அபராதம் விதித்தது.

ஜூன் 24 க்கும் ஜூலை 12 க்கும் இடையில் நோர்சியரிஃபா மியூசின் என்பவரது அடையாள அட்டையை பயன்படுத்தி மைசஜதெரா பயன்பாட்டை சரிபார்த்ததற்காக, இந்தோனேசிய பெண்ணான ஜீஹாரா டோடிங்(22) என்பவருக்கு மாஜிஸ்திரேட் R. மனோமணி 6,000 வெள்ளி அபராதம் விதித்தார்.

மேலும், ஜூலை 17 ம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தேசா பினாங் 2, லெபு சுங்கை பினாங் 7 இல் ஜீஹாரா போயிசி என்ற பெயரில் ஒரு போலி மைகாட் வைத்திருந்ததற்காகவும் ஜீஹாராவிற்கு 8,000 வெள்ளி அபராதம் விதித்தார்.

இரண்டு குற்றச்சாட்டுகளும் தேசிய பதிவு விதிமுறைகள் 1990 இன் ஒழுங்குமுறை 25 (1) (இ) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டன. அத்தோடு இப்பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது RM20,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க ஏற்புடையதாகும்.

வழக்குகள் பொது நலனுக்காக இருப்பதால், மாநில தேசிய பதிவுத் துறையின் வழக்குரைஞர் அஸ்ரி அகமது தண்டனை வழங்குவதற்கு அழுத்தம் கொடுத்தார்.

“குற்றத்தின் தீவிரத்தன்மை காரணமாக தடுப்பு தண்டனை விதிக்க நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மலேசியாவில் தங்கியுள்ள ஜீஹாரா, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் , தனக்கு குறைந்த அபராதம் விதிக்குமாறு கோரினார்.

“நான் இங்கே தனியாக இருக்கிறேன், எனது குடும்பம் இந்தோனேசியாவிற்கு திரும்பிச் சென்று விட்டார்கள்,” என்றும் அவர் கூறினார். மேலும் அபராதம் செலுத்தவோ அல்லது அவருக்கு உதவவோ யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேசிய பதிவுத் துறை இயக்குநர் நூர் சுல்பா இப்ராஹிம், போலி அடையாள அட்டை தொடர்பில் தொடரப்பட்ட வழக்குகள் பல உள்ளன என்றும் இது முதலாவது வழக்கு இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here