கோலாலம்பூர்:
பிரபல ஆடை விற்பனை நிறுவனமான படினி ஹோல்டிங்ஸ் (Padini Holdings) மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்குச் சொந்தமான சில வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அதிரடியாக முடக்கியுள்ளது.
2001-ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதியளிப்புச் சட்டத்தின் கீழ் (AMLA) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புர்சா மலேசியாவிற்கு வழங்கிய அறிக்கையில் அந்நிறுவனம் நேற்று உறுதிப்படுத்தியது.
இருப்பினும், முடக்கப்பட்ட கணக்குகள் அன்றாட வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாதவை என்பதால், நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்று அதன் நிர்வாகக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், இது குறித்த மேலதிக விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடப் போவதாகவும் படினி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தித் தளங்களுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தை ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகிறது.




















