மலேசியாவில் 3,000 மின்சார வாடகை வாகனங்கள் அறிமுகம்: போக்குவரத்து துறையில் புதிய புரட்சி!

கோலாலம்பூர்:

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், சுமார் 3,000 மின்சார மற்றும் ஹைப்ரிட் வாடகை வாகனங்கள் (Teksi) விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

உள்நாட்டு வாடகை வாகன அமைப்புகளின் கூட்டமைப்பு (GTSM) மற்றும் நான்கு முன்னணி நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த அதிநவீன வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களுக்குத் தீர்வாக அமையும் இத்திட்டத்தில், மின்கலங்களை விரைவாக மாற்றும் ‘பேட்டரி ஸ்வாப்பிங்’ (Battery Swapping) தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் ஓட்டுநர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சில நிமிடங்களிலேயே மின்கலங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்பதுடன், முதல் ஒரு ஆண்டிற்கு இச்சேவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகளிடையே நாட்டின் நற்பெயரை உயர்த்துவதுடன், குறைந்த வாடகை மற்றும் காப்பீட்டு வசதிகளுடன் கூடிய இத்திட்டம், நாட்டின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து பசுமைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here