சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து பரிசோதனை

ஒலிம்பிக்: மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்குமா?

பளுதூக்குதலில் தங்கம் வென்ற சீனா வீராங்கனை ஜிஹியு ஹூ(நடுவில்) வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை சானு, வெண்கலம் வென்ற இந்தோனேஷியா வீராங்கனை கேன்டிகா ஆயிஷா .

புதுடெல்லி

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவுக்கான பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஜிஹியு ஹூவுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதில் அவர் தோல்வி அடைந்தால், வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்

கடந்த 2000  ஆம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-  ஆவது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார்.

அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது. 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ(87கிலோ ஸ்நாட்ச், 115கிலோ க்ளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முயற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார்.

சீன வீராங்கனை ஜிஹியு ஹூ 210 கிலோ எடை தூக்கி தங்கம் வென்று ஒலிம்பிக்கில் வரலாறு படைத்துள்ளார், இந்தோனேசிய வீராங்கனை கேன்டிகா ஆயிஷா 194 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில் தங்கப் பதக்கம் வென்ற ஜிஹியு ஹூவுக்கு ஊக்க மருந்துப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த ஊக்கமருந்து பரிசோதனையில் சீன வீராங்கனை வெற்றி பெற்றால், அவர் பெற்ற தங்கப்பதக்கம் உறுதி செய்யப்படும் அதில் தோல்வி அடைந்தால், வெள்ளி்ப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சானுவுக்கு வழங்கப்படும்.

ஒலிம்பிக் போட்டியில் இதுபோன்று ராண்டமாக ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்படும். இதில் வெற்றி பெற்ற வீராங்கனைகள், தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ஏ சாம்பிள், பி சாம்பிள் பரிசோதனை நடத்தப்படும். இதில் வீரர், வீராங்கனைகளின் சிறுநீர், ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படும்.

இந்த பரிசோதனையில் ஒலிம்பிக் அமைப்பால் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் மட்டுமல்லாது, எந்த உடல்வலி, தசைவலி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட வலிநிவாரணி மருந்துகள் எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அவருக்குதடை விதிக்கப்படும், அவரிடம் இருந்து பதக்கமும் பறிக்கப்படும்.

அதேசமயம், ஊக்கமருந்து பரிசோதனையில் சீன வீராங்கனை வெற்றி பெற்றால், அவரிடமே பதக்கம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ பளுதூக்குதலில் தங்கம் வென்ற சீன வீராங்கனை டோக்கியோவில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here