முருங்கை மரத்தில் மீண்டும் வேதாளம்

 விலாங்கு வேலையைக் காட்டிய சீனா.. 

கடந்த ஆண்டு மே மாதம் சீனத்துருப்புக்கள் ஊடுருவியதை அடுத்து இந்தியா பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை எல்லை கட்டுப்பாடு பகுதியில் நிறுத்தியது. சீனாவும், அதிகமான ராணுவ வீரர்களை, ஆயுதங்களையும் குவித்து வந்தது. இதுவரை இந்தியா – சீனா இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், இரு தரப்பினரின் துருப்புக்கள் படிப்படியாக திருமப் பெறப்பட்டதால் எல்லையில் பதற்றம் தணிந்தது.

இந்நிலையில்கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் என்ற பகுதியில் உள்ள சார்டிங் நாலாவின் இந்தியப் பக்கத்தில் சீனர்கள் கூடாரங்களை அமைத்துள்ளனர் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் இந்த கூடாரங்களை சீன ராணுவத்தினர் அமைக்கவில்லை எனவும், பொதுமக்கள் தான் அமைத்துள்ளனர் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் விவரித்தனர். மேலும் இந்தியா அவர்களை திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாலும், அவர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.

எனினும் டெம்சோக் பகுதியில் இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்படுவது இதுமுதன்முறை அல்ல.. 1990களில் இருநாட்டு அதிகார மட்ட குழுவினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், டெம்சோக் ,  த்ரிக் ஹைட்ஸ் (Demchok and Trig Heights) போன்ற எல்லை பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டது என்பதை  இரு நாடுகளும் ஒப்பு கொண்டன..

இந்த சூழலில் தற்போது மீண்டும் இதே பகுதிகளில் சீனர்கள் முகாமிட்டுள்ளனர்.. இதையடுத்து நேற்று 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்கு சீனா அழைத்தது. ஆனால் நேற்று கார்கில் தினம் அனுசரிக்கப்பட்டதால், இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டாது. எனவே இந்தியா – சீனா இடையேயான கமாண்டர்-மட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அல்லது அதற்கு முன்னதாக நடைபெற உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்..

இதுகுறித்து பேசிய ராணுவ மூத்த அதிகாரி ஒருவர், 2019ம் ஆண்டு இருந்த பதட்ட நிலையைப் போன்று தற்போது இல்லை.. பிப்ரவரி மாதத்தில் இருந்து சீனாவால் எந்த ஓர்  ஊடுருவல்களும் ஏற்படவில்லை. ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு ஏதும் நிகழவில்லை. சீனா முக்கிய புள்ளிகளில் இருந்து விலக விரும்புகிறது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதனிடையே சீன அரசு கிழக்கு லடாக்கில் சுழற்சி முறையில் ராணுவ வீரர்களை மாற்றி வருவதாகவும், ராணுவ உள்கட்டமைப்பை மிகவும் வேகமாக எழுப்பி வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களின் ஆழமான பகுதிகளில் சுமார் 4 பிரிவுகள், சிக்கலான சிஞ்சியாங் மற்றும் திபெத் மாகாணங்களை இணைக்கும், ஜி 219 நெடுஞ்சாலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.. இதனால் இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது..

இந்நிலையில் இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். லடாக் எல்லை சீனா முகாமிட்டிருப்பது தொடர்பான செய்தியை பதிவிட்டுள்ள அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ” சீனாவை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி இந்திய அரசுக்கு எந்த ஐடியாவும் இல்லை.

இப்போது அவர்களின் ( சீனர்களின்) செயல்களை புறக்கணிப்பது எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here