சீனாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; கேள்விக்குள்ளாகும் சீனத்தடுப்பூசிகள்

நான்ஜிங், ஜூலை 31:

சீனா தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட 15 நகரங்களில் டெல்தா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு மிக கடுமையாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் நான்ஜிங் விமான நிலையத்தில்தான் ரஷ்யாவில் இருந்து வந்த துப்புரவு பணியாளர் ஒருவரிடம் இந்த டெல்தா வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து நான்ஜிங்கில் இருந்து விமான சேவைகள் 2 வார காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நான்ஜிங் நகரில் கொரோனா பரிசோதனைகள் கடுமையாக்கப்பட இருப்பதாகவும் சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெய்ஜிங்கில் கடந்த 175 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருபவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். புதிய டெல்தா வகை வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து சீனாவின் தடுப்பூசி குறித்து கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா கால கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் ஒன்று கூடும் போது இடைவெளியுடன் நிற்க வேண்டும்; ஒருவருக்கு ஒருவர் பேசக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான விதிகள் அமல்படுத்தப்படுகின்றனவாம். இது தொடர்பாக பெய்ஜிங் பல்கலைக் கழக மருத்துவமனை வல்லுநர்கள் கூறுகையில், டெல்தா வகை வைரஸ் அதிவிரைவாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்கின்றனர்.

இதுவரை 200க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜியாமென் நகரத்தில் 4 பேருக்கு டெல்தா வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here