முதுமலை காப்பகத்திற்கும் அங்கீகாரம்
கோவை மாவட்டம் ஆனைமலை, நீலகிரி முதுமலை புலிகள் காப்பகங்களை உலகத் தரமிக்க புலிகள் காப்பகமாக அங்கீகரித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தியாவில் 20 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் உலக அளவிலான புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுத்துதல் ஆய்வினை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2020- ஆம் ஆண்டு செயல்படுத்தியது.
அதில் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம், புலிகள் பாதுகாப்புக்கான மேலாண்மை, பாதுகாப்பு, பொதுமக்கள் ஈடுபாடு ஆகியன கணக்கிடப்பட்டன.
புலிகள் வாழும் 20 மாநிலங்களில் உள்ள 28 புலிகள் காப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 14 புலிகள் காப்பகங்களுக்கு புலிகள் பாதுகாப்பு தரநிலையை உறுதிப்படுத்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, ”தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு அங்கீகாரச் சான்று கிடைத்துள்ளது.
சிறப்பான வன உயிரின பாதுகாப்பு பொதுமக்கள் ஈடுபாடுள்ள, புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுத்தும் உலகத் தரமிக்க புலிகள் காப்பகமாக சான்று கிடைத்தது, மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.