முடிவுக்கு வருகிறதா இராணுவ ஆட்சி?.

 அவசர நிலையை நீக்குவதாக மியான்மரில் இராணுவம் அறிவிப்பு!

மியான்மரில் 2023 ஆக்ஸ்ட்க்குள் தேர்தலை நடத்தி, அவசர நிலை திரும்பி பெறப்படும் என அந்நாட்டு இராணுவ தலைவர் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்த்த அந்நாட்டு இராணுவம், கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அதிகாரத்தை தனது வசமாக்கியது. மேலும், மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட நிலையில், தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டினால் ஆட்சியை கவிழ்த்ததாக இராணுவ தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது.

இராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சான் சூகிக்கு ஆதரவு தெரிவித்தும் கிளர்ச்சியாளர்கள் , பொதுமக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் கொடூரமான முறைகளைக் கையாண்டு வரும் நிலையில், தற்போது வரை 900 பேர் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதனால் இராணுவத்தின் அடக்குமுறைக்கு மேலும் எதிர்ப்பு கிளம்பி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும் சோகம் ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதாரமும் 18 விழுக்காடு வரை மியான்மரில் சரியலாம் என உலக வங்கி கணித்திருக்கிறது.

இந்நிலையில், இராணுவ ஆட்சியின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிப்பு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்ட மியான்மர் இராணுவம், ஆகஸ்ட் 2023 ஆம் வருடத்திற்குள் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்ததும் அவசரநிலை நீக்கப்பட்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவலை இராணுவத் தலைவர் உறுதி செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here