ஆடி அமாவாசை (ஆகஸ்டு 8) அன்று முன்னோர்களுக்கு படையல் எப்படி வைக்க வேண்டும்?

கோலாலம்பூர்: 

மாதம் ஒரு அமாவாசை என ஆண்டுக்கு 12 அமாவாசை வந்தாலும், அதில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினங்கள் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம், சிரார்தம் கொடுக்க சிறந்த நாளாக இருந்தாலும், மற்ற நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதில்லை. மேலே குறிப்பிட்ட 3 அமாவாசை மிக சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது.

பூமியில் நாம் பிறவி எடுப்பதே நாம் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையிலேயே என்று கூறப்படுகின்றது.
நமது கர்மாவை நாம் நிறைவேற்றாமல் இருக்க முடியாது.
எனவே நமது கர்மாவை நீக்குவதற்கு முன்னோர்களது ஆசி கண்டிப்பாக வேண்டும்.

இவ்வாறு நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது , அவர்களது ஆத்மா சாந்தியடையும். நாங்கள் ஜாதகம் பார்க்கும் போது, சில சமயம் பித்ரு தோஷம் இருக்கு என்று கூறுவார்கள். எனவே முன்னோர்களை வழிபட்டு அவர்கள் ஆசியை பெறுவது முக்கியம்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை 23ம் தேதி (ஆகஸ்ட் 8) ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது. ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு அமாவாசை தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 7.56 மணி வரை நீடிக்கிறது. அதனால் ஆகஸ்ட் 8 அன்று சூரிய உதயத்திற்கு பின் எப்போது வேண்டுமென்றாலும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கலாம்.

அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும்.

ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு காலையிலேயே துவங்கி விட வேண்டும். அன்றைய தினம் ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.

ஆடி அமாவசை விரதம் யார் இருக்க வேண்டும்? 

தற்போது நாட்டில் நிலவும் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக புண்ணிய நதிகளுக்கோ, கடல்களுக்கோ முடியாதவர்கள் தம் முன்னோர்களை நினைத்து வீட்டிலேயே தர்ப்பணம் செய்ய முடியும்.

ஆடி அமாவாசை விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அனால் தந்தையை இழந்தவர்கள் மட்டுமே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மற்றையவர்கள் முன்னோர்களை வணங்கி தானம் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது.

முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து பூ வைத்து அப்புகைப்படங்களின் முன் ஒரு இலையில் சமைத்த உணவுகளைப் படைக்க வேண்டும்.

படங்களுக்கு தீபாராதனை செய்த பின்னர், அவசியம் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்.

அதன் பின்னர் இலையில் முன்னோர்களுக்காகப் படைத்த உணவை, வீட்டில் உள்ள மூத்தவர் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் மற்றவர்களும் சாப்பிடலாம். இதனால் நம் முன்னோர்கள் மகிழ்ந்து அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.
வசதி குறைந்தவர்கள் எள்ளும் தண்ணீரும் இறைத்தாலே போதுமானது என்று கூறப்படுகின்றது. மேலும் பொதுவாக ஆறு பிண்டங்கள் வைத்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

அமாவாசையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதை 

மகாபாரத குருஷேத்ர போருக்கு முன் அதில் வெற்றி பெற எந்த நாளில் கள பலி கொடுக்க வேண்டும் என, மிகச்சிறந்த ஜோதிடரும், பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் துரியோதனன் கேட்டான். போரில் தங்களைக் கொல்லத்துடிக்கும் எதிரி துரியோதனன் என அறிந்தும் அவருக்கு பூரண அமாவாசை அன்று களப்பலி கொடுத்தால் உங்களுக்கு தான் வெற்றி என நாள் குறித்து கொடுத்தான்.

சகாதேவன் பொய் சொல்லமாட்டான் என்பதால், துரியோதனன் அமாவாசை அன்று களபலி கொடுக்கத் தயாரானான்.

அப்போது ஒரு தந்திரம் செய்த கிருஷ்ணர், அமாவாசைக்கு முதல் நாளே ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்த சூரியனும், சந்திரனும், ஒன்றாக பூலோகம் வந்து, கிருஷ்ண பரமாத்மாவே, நாங்கள் இருவரும் ஒன்றாக சேரக்கூடிய நாள் தானே அமாவாசை. ஆனால் நீங்கள் இன்றே தர்ப்பணம் கொடுக்கிறீர்களே, இது சரியானதா என கேட்டனர்.

அதற்கு கிருஷ்ண பகவானோ, சரிதான் நீங்கள் இருவரும் ஒன்றாக சேரும் போது தான் அமாவாசை . இன்று நீங்கள் இருவரும் சேர்ந்து வந்துள்ளீர்களே அப்போது அமாவாசை தானே என சமயோசிதமாகப் பதிலளித்தார்.

சகாதேவன் குறித்துக் கொடுத்தபடி களபலி கொடுத்தான் துரியோதனன். ஆனால் அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது. இதனால் நல்லவர்களான பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அமாவாசை தர்ப்பணம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் தெரிந்து கொண்டு, நமது முன்னோர்களை வழிபட்டு அவர்களது ஆசியை பெறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here