சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 56வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு அஞ்சல்தலைகளை ‘சிங்கப்பூர் போஸ்ட்’ வெளியிட்டுள் ளது.
அஞ்சல்தலைகளில் உணவக கடைக்காரர்கள், துப்புரவுப்பணியாளர்கள், பேரங்காடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட 10 முன்களப் பணியாளர் பிரிவினர் இடம்பெற்றிருப்பது அஞ்சல்தலைகளுக்கு மேலும் சிறப்புச் சேர்த்துள்ளது.அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இன்று முதல் விற்கப்படும் இந்த அஞ்சல்த லைகள் 0.30 முதல் 1.40 சிங்கப்பூர் டாலர் வரை மதிப்பு பெற்றிருக்கின்றது.
கொவிட்-19 கொள்ளைநோய் சூழலில் முன்களப் பணியாளர்களது பணி மிக உன்னதமாக இருந்து வருவதை உணர்த்த அஞ்சல் விநியோகிப்பாளர், பேருந்து ஓட்டுநர், உணவு விநியோக ஊழியர் போன்றோரையும் ‘சிங்போஸ்ட்’ கௌரவித்துள்ளது. கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள மருத்துவர், தாதி, கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும் அதிகாரி ஆகியோரும் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
“கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் தொடர்ந்து சிங்கப்பூரின் அத்தியாவசிய ஊழியரணி போராடி வருகிறது. இந்த சிரமமான காலத்தில் உள்ளுக்குள் கவலைகள் இருந்தாலும் தங்களுக்குத் தரப்பட்டுள்ள பணிகளை அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் இவர்கள் ஆற்றி வருகிறார்கள்,” என்று சிங்போஸ்ட் நேற்று வெளியிட்ட அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.“பயம், சோர்வு, அசௌகரியம் போன்றவற்றை எதிர்கொண்டு இந்த நாயகர்கள் தங்களின் வேலையில் கண்ணியத்துடன் ஈடுபடுவதன் மூலம் சக சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் தருகின்றனர்,” என்றது நிறுவனம்.
இந்த அஞ்சல்தலைத் தொகுப்பின் மொத்த விலை 11.55 சிங்கப்பூர் டாலர்கள். இதை வாங்குவோருக்கு இதே முன்களப் பணியாளர்களைக் காட்டும் சிறுவடிவத் தொகுப்பு ஒன்றும் கிடைக்கும். இதன் விலை 2 சிங்கப்பூர் டாலர்களாகும். அஞ்சல்தலைத் தொகுப்பின் முகப்பில் குடிநுழைவு அதிகாரிகள், கட்டுமான ஊழியர்கள், ஹோட்டல் துறைப் பணியாளர்கள் போன்ற பிரிவினரும் இடம்பெற்றிருக்கின்றனர். அவரவர் தங்களால் இயன்ற வகையில் பங்களித்துள்ளதாக நிறுவனம் கூறியது.
இதேபோல் கடந்த மாதம் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் பங்கேற்ற நீச்சல், மேசைப்பந்து போன்ற விளையாட்டுகளைக் காட்டும் அஞ்சல்தலைகளை ‘சிங்போஸ்ட்’ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.