பாசிர் மாஸ் : ஜாலான் பாசிர் மாஸ்-தானா மேராவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது, 2.095 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஹேரோயின் போதை வகையை அடிப்படையாகக் கொண்ட சைக்கோட்ரோபிக் (psychotropic) மாத்திரைகளை கைப்பற்றியதுடன் அதனை வைத்திருந்த தம்பதியினரையும் போலீசார் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 8) நண்பகல் 1.20 மணியளவில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் பாசிர் மாஸ் போதைப்பொருள் ஒழிப்பு குழுவைச் சேர்ந்தவர்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், ஒரு லோரி ஓட்டுநரை கைது செய்ததைத் தொடர்ந்து குறித்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கிளந்தான் மாவாட்ட போலீஸ் தலைவர் டத்தோ ஷஃபியன் மமத் கூறினார்.
“27 வயதான அந்த லோரி ஓட்டுநரை கைது செய்த போதும் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பின்னர் அருகில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்கு போலீசார் சென்று தேடுதல் நடத்தினார்கள். அவ்வீட்டில் தாய்லாந்து நாட்டு பிரஜையான அவரது 23 வயது மனைவி வீட்டில் இருந்தார்.
“சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது, 13.295 கிலோகிராம் எடையுள்ள ஹெராயினை அடிப்படையாக கொண்ட ஒரு பொட்டலத்தை சந்தேக நபர் போலீசாரிடம் காட்டினார். இதன் பெறுமதி 1.23 மில்லியன் வெள்ளி மதிப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் “860,000 வெள்ளி மதிப்புள்ள 86,000 சைக்கோட்ரோபிக் மாத்திரைகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்” என்று அவர் புதன்கிழமை (ஆகஸ்டு 11) இங்கு பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
போதைப்பொருள் கடத்தலுக்காக இரண்டு சந்தேக நபர்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏழு நாட்கள் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா