கெப்போங்கில் இரவு விருந்தில் பங்கேற்ற 18 பேர் கைது; தொடர் கதையாகும் களியாட்ட விருந்துகளும் கைதுகளும்?

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூரில் உள்ள கெப்போங்கின் ஜாலான் மெட்ரோ பிரிமா பாராட் என்ற இடத்தில் நடந்த ஒரு இரவு விருந்தில் பங்கேற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் பெஹ் எங் லாய் இச்சம்பவம் பற்றி கூறியபோது, காவல்துறையின் போதைப்பொருள் பிரிவு அதிகாலை 1 மணியளவில் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தியது, அதன் போது 19 முதல் 42 வயதிற்குட்பட்ட 11 ஆண்கள் மற்றும் ஏழு பெண்களை கைது செய்தது என்றார்.

சோதனையின் போது, ​​பெரிய சத்தமாக பாடல் ஒலித்தது என்றும் 18 சந்தேக நபர்களும் மது அருந்தியிருந்தனர் என்றும் மேலும் ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் 27.5 கிராம் மெத்திலெண்டியோக்ஸிமெதாம்பேட்டமைன் (methylenedioxymethamphetamine- MDMA) என நம்பப்படும் தூளையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும், 27 வயதான ஆண் சந்தேக நபர்களில் ஒருவரே இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. சந்தேக நபர் WeChat பயன்பாட்டின் மூலம் விருந்திற்கு அழைப்பு விடுத்தார் என்றும் மூன்று மணி நேரம் ஒரு அறையை வாடகைக்கு எடுக்க 150 வெள்ளி வரை கட்டணம் வசூலித்தார் என்றும் தெரிவித்தார்.

“இந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே சந்தேக நபர் இந்த நடவடிக்கையை நடத்தத் தொடங்கினார்,” என்றும் பெஹ் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 பேருக்கு ஆம்பெடமைன், மெத்தாம்பேட்டமைன் மற்றும் கெட்டமைன் (amphetamine, methamphetamine and ketamine) ஆகியவற்றின் சோதனையில் நேர்மறையான பதில் பெறப்பட்டது என்றும் மற்றய ஆறு பேர் அவற்றுக்கு எதிர்மறையான பதிலையும் பெற்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நஞ்சு சட்டம் 1952 ன் பிரிவு 39A (1) இன் கீழ் இவ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலதிக விசாரணைக்காக நாளை கைது செய்யப்பட்டவர்களை தடுப்புக் காவலில் வைக்க போலீசார் நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் கைது செய்யப்பட்ட 18 சந்தேக நபர்களுக்கும் தேசிய மீட்பு திட்டத்தின் கீழ் இயக்க கட்டுப்பாடுகளை மீறியதற்காக தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிகளுக்குள் நடவடிக்கைகள்) 2021 ன் கீழ் 4,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

“மீட்பு திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட SOP களை மீறுவது உட்பட சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று பெஹ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here