ஜோகூர் பாரு: பண்டார் பாரு உதாவின் ஜாலான் பாடி மஹ்சூரியில் நேற்று நண்பகல் 12 வயது சிறுவன் ஒருவர் பெரிய வாய்க்காலில் மூழ்கி மரணமடைந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வடக்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ரூபியா அப்துல் வாஹித் இச்சம்பவம் பற்றி கூறுகையில், நேற்று மாலை 5.15 மணியளவில், மழையின் காரணமாக நீர் ஓட்டம் அதிகமாக இருந்தபோது பாதிக்கப்பட்ட சிறுவன் ஒரு பெரிய வாய்க்காலில் குதித்து நீந்தியதாக அவ்வட்டார மக்கள் தெரிவித்ததாக கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அவருக்கு அவ்வாய்காலில் நீர்மட்டம் அதிகமாகவும் நீர் ஓட்டம் வேகமாகவும் இருந்ததால் அவரை அதில் நீந்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள் ஆனால் பாதிக்கப்பட்டவர் அதனை பொருட்படுத்தாது வாய்க்காலில் நீந்தி விளையாடிக்கொண்டே இருந்தார் என்றும் கூறினார்.
சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் சிறுவனை வடிகாலில் இருந்து மீட்டனர், ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள சுல்தானா ஆமீனா மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் இறுதிச் சடங்கு செய்வதற்காக அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் “இந்த சம்பவத்துடன் இதுவரை எந்த குற்றவியல் தொடர்பும் இருப்பதாக நீரூபிக்கப்படவில்லை” என்றும் ரூபியா கூறினார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, என்றும் அவர் தெரிவித்தார்.









