18 வயதுக்கு குறைந்தவர்கள் ஒரு வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் கேம் விளையாட முடியும் ; சீனா அதிரடி அறிவிப்பு

பெய்ஜிங்: சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேம்கள் விளையாட வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு உள்பட சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுக்க சீனா இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்று பரவிய பின்னர் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மொபைலில் வீடியோகேமிற்கு அடிமையாகி கிடக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்.

பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட ஆன்லைன் கேம்கள் பல, சிறுவர்களை அடிமையாக்கி, விளம்பர வருவாயை பெருக்கி வருகின்றன. இந்நிலையில் இளைஞர்கள், சிறுவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் போதை போல் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க நடவடிக்கையை சீனா தொடங்கி உள்ளது.

சீனா தனது நாட்டின் கோடிக்கணக்கான இளம் வயது சீறார்களுக்கு ஒரு புதிய விதியைக் கொண்டுள்ளது. பள்ளி நாட்களில் ஆன்லைன் வீடியோ கேம்கள் இனி விளையாட முடியாது என்றும் வெள்ளிக்கிழமை, வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்.

இளைஞர்கள் வீடியோ கேம் போதையில் இருப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் சீனா இந்த கடுமையான புதிய நடவடிக்கைகளை திங்கள்கிழமை வெளியிட்டது. சீனாவின் நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளின் படி, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் திங்கள் மற்றும் வியாழன் இடையே ஆன்லைன் வீடியோ கேம்ஸ் விளையாடக் கூடாது.

அதேநேரம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் ( வாரத்தின் மற்ற மூன்று நாட்களிலும்) பொது விடுமுறை நாட்களிலும், அவர்கள் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே ஆன்லைன் கேம் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here