புக்கிட் மெர்தாஜாம்: பிராய் தொழிற்பேட்டை அருகே நேற்று இரவு ரயிலில் அடிபட்டு 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆடவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு 8.20 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட நபர் பிராயின் கம்போங் ஜாவா அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக நம்பப்படுகிறது.
செபராங் பிராய் மத்திய போலீஸ் தலைவர் ஷாபி அப்துல் சமத் கூறுகையில், பட்டர்வொர்த்தில் இருந்து புக்கிட் மெர்தாஜாம் நோக்கி பயணித்த என்ஞின் மோதியதே, அந்த நபரின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றார்.
வேலையற்றவரான அந்த ஆடவர் பலத்த காயமடைந்ததன் விளைவாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் அவர் கூறினார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.





















