1.74 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தோனேசிய ஆடவர் கைது.

ஈப்போ : 1.74 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்களை, இரண்டு சாக்குகளில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தோனேசிய நாட்டு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேராக் போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபரலலத்ராஷ் வாஹிட் இச்சம்பவம் பற்றி கூறுகையில், குறித்த சந்தேக நபர் நள்ளிரவு 12.55 மணியளவில் பாகான் லிபாஸ் லாவூட், ரங்கூப் என்ற இடத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என்றார்.

மேலும் செல்லுபடியாகும் ஆவணங்கள் கொண்ட அந்த ஆடவர், இரண்டு சாக்குகளில் சியாபு வகை போதைப்பொருட்களை, பாகான் லிபாஸ் அருகிலுள்ள சட்டவிரோதமான ஜெட்டிக்கு கொண்டு செல்லும் போதே அவரை கைது செய்ததாக மியோர் தெரிவித்தார்.

“அந்த ஆடவர் மூன்று மாதங்களாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், கடல் வழியாக இவற்றை கடத்தி சென்று , இந்தோனேசியாவில் விற்பனை செய்யும் நோக்கில் செயல்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மேலும் கடல்வழியாக கொண்டு செல்லப்படும் இந்த போதைப்பொருட்களை பெற்றுக் கொள்ளுவதற்கு, கடலின் நடுவில் ஆட்கள் காத்திருக்க வேண்டும்,” என்று பேராக் போலீஸ் தலைமையகத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் மியோர் கூறினார்.

போதைப்பொருட்கள் சுமார் 300,000 போதைப்பித்தர்கள் பயன்படுத்த போதுமானது என்றும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஆடவர், போலீஸ் விசாரணைக்கு உதவும் பொருட்டு ஏழு நாட்களுக்கு போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

இந்த வழக்கு அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952 ஆம் ஆண்டின் பிரிவு 39 Bன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here