ஜாலான் துன் ரசாக்கில் லம்போர்கினி காரை வேகமாக ஓட்டி, சாலை விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு நீதிமன்றம் சிறை மற்றும் அபராதம் விதித்தது

கோலாலம்பூர்: கடந்த மாதம் லம்போர்கினி காரை வேகமாக ஓட்டியதில் பல வாகனங்களுக்கு இடையூறு விளைவித்ததுடன் சாலை விபத்தையும் ஏற்படுத்திய டாஷ்கேம் காட்சியில் பதிவாகியிருந்த 28 வயதான கார் ஓட்டுநருக்கு, நீதிமன்றம் இரண்டு வார சிறை மற்றும் 9,000 வெள்ளி அபராதம் வழங்கி தீர்ப்பளித்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட கார் ஓட்டுநரான அப்துல் ரஹ்மான் அப்துல்லாவுக்கு மாஜிஸ்திரேட் அமனினா முகமட் அனுவார் இந்த தண்டனையை விதித்தார்.

குற்றப்பத்திரிகையின் படி, ஓட்டுநர் உரிமம் இல்லாத அப்துல் ரஹ்மான் (கார் ஓட்டுநர்) ஒரு ஊதா நிற லம்போர்கினி கல்லார்டோவை கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் ஆறு வாகனங்களின் மீது விபத்தை ஏற்படுத்தினார்.

செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 8 மணியளவில் இங்குள்ள ஜாலான் துன் ரசாக்கில் அவர் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 42 (1) இன் கீழ், ஐந்து வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், 5,000 வெள்ளிக்கு குறையாமலும் மற்றும் 15,000 வெள்ளிக்கு மிகாமல் அபராதமும் விதிக்க இது வழிசெய்கிறது.

துணை அரசு வழக்கறிஞர் சித்தி நூர்ஸ்யுஹதா அப்துல் ரவுஃப் குற்றம் சாட்டப்பட்டவருக்கு, ஒரு பாடமாக இருக்கும் நோக்கில் சிறைத்தண்டனையை வழங்குமாறு வலியுறுத்தினார்.

அப்துல் ரஹ்மானின் சிறைத்தண்டனை, அவர் கைதாகிய தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஐந்து மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அத்தோடு குற்றம் சாட்டப்பட்டவர் ஐந்து வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டது.

புலாத்தான் பஹாங் சுற்று வட்டப்பாதைகள் நோக்கி செல்லும் புரோட்டான் பெர்டானா மீது வேகமாக வந்த லம்போர்கினி மோதிய டாஷ்காம் (dashcam) காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த சம்பவத்தை ஒரு சாட்சி பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here