கோத்தா பாரு: மாற்றுத்திறனாளியான ஆடவர் தனது 16 வயது உடல் ஊனமுற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 பிரம்படிகளையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஹமட் பாஸ்லி பஹ்ருதீன், தனது 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 வயது நபருக்கு இந்த தண்டனையை வழங்கினார்.
அந்த நபர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் சிறைத் தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் (தந்தை) தன்னிடம் நடந்துகொள்ளும்விதம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் தனது ஆசிரியரிடம் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆசிரியர் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் காவல் நிலையத்தில் இது தொடர்பில் புகார் அளித்தார்.
மேலதிக விசாரணைகளில் பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வீடியோவை, ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று இரவு 11.59 மணிக்கு தனது மொபைல் போனில் பதிவு செய்தது தெரியவந்தது.
கால் ஊனமுற்றவரான பாதிக்கப்பட்ட பெண், தனது மாற்றாந்தாய் இறந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, மார்ச் 2017 இல் குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தையால், தான் முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது படுக்கையறையில் சுமார் 30 முறை இந்தச் செயலைச் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றவியல் சட்டப் பிரிவு 376 (3) இன் கீழ் ஆகஸ்ட் 18 அன்று இரவு 11.59 மணியளவில் கோலக்கிராய் அருகே உள்ள அவரது அறையில் இந்த குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த பிரிவின் கீழ் குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது 10 பிரம்படிகளும் விதிக்க வழிசெய்கிறது.
எந்த ஒரு வழக்கறிஞராலும் பிரதிநிதித்துவம் செய்யப்படாத குற்றவாளி, குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் தனக்கு குறைந்த பட்ச தண்டனையை நீதிமன்றத்திடம் கோரினார்.
எவ்வாறாயினும், குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, குற்றவாளிக்கு சிறைத் தண்டனையை வழங்கும்படி, துணை அரசு வழக்கறிஞர் அபு அர்சால்னா ஜெய்னல் ஆபிதீன் நீதிமன்றத்தை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.