STR உதவித்தொகை RM16 பில்லியனாக அதிகரிப்பு! இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு மித்ரா நிதியும் உயர்வு – டாக்டர் குணராஜா!

(ரெ. மாலினி)

மலாக்கா:

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் RM6 பில்லியனாக இருந்த சும்பங்கான் துனாய் ரஹ்மா (STR) உதவித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தற்போது பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் RM16 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜா தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைப்பதற்கும், குறிப்பாகக் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல்படும் மித்ரா (MITRA) அமைப்பிற்கான நிதி ஒதுக்கீடும் தற்போது RM150 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிதி ஒதுக்கீடு இந்திய சமுதாயத்தின் கல்வி, பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் சமூக நலன் சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவும் முறையான நிதி ஒதுக்கீடுகளும் அவசியம் என்று குறிப்பிட்ட டாக்டர் குணராஜா, அறிவிக்கப்படும் உதவித் திட்டங்கள் தகுதியான மக்களைச் சென்றடைவதும் மிகவும் முக்கியமானதாகும் என்றார்.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளையும் மக்கள் நலத் திட்டங்களையும் கருத்தில் கொண்டு, எதிர்வரும் தேர்தல்களில் இந்திய வாக்காளர்கள் தங்களது சமுதாயத்தின் எதிர்கால நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தொடர்வதற்கு, அனைத்து தேர்தல்களிலும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜா கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here