கடப்பிதழை தற்காலிகமாக விடுவித்த நீதிமன்றம் ; விரைவில் சிங்கப்பூருக்கு பறக்கிறார் ரோஸ்மா

கோலாலம்பூர்: டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் (படம்) தனது கர்ப்பிணி மகளை சந்திக்கும் நோக்கில், அவர் சிங்கப்பூர் செல்வதற்காக அவரது கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவிக்க அனுமதித்துள்ளது.

இது தொடர்பான ரோஸ்மாவின் விண்ணப்பத்தை அரசு உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) அனுமதித்தது, தற்போது அவருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது, இருந்தும் அவரது பயண ஆவணத்தை தற்காலிகமாக வெளியிடுவதற்கு, அரசு தரப்பு எந்த ஆட்சேபனையு ம் தெரிவிக்கவில்லை.

நீதிபதி முஹமட் ஜைனி மஸ்லான், இன்று ரோஸ்மாவின் கடப்பிதழை அவரிடம் திருப்பித் தர உத்தரவிட்டார் மற்றும் அதை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் மறுபடியும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது .

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா, எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மகள் நூரியானா நஜ்வாவைப் பார்க்க சிங்கப்பூர் செல்வதற்காக, தனது கடப்பிதழைக் கேட்டு நீதிமன்றத்திடம் மனுச் செய்திருந்தார்

33 வயதான நூரியானா, சிங்கப்பூரில் தனது இரண்டாவது குழந்தையை விரைவில் பெற்றெடுக்க உள்ளார். அவர் ஏற்கனவே பிரசவத்தின்போது அதிக ஆபத்தை எதிர் நோக்கியிருந்தார் என்பதையும் நீதிமன்றத்திடம் மேற்கோள் காட்டப்பட்டது.

முன்னதாக, ரோஸ்மாவின் வழக்கறிஞர் டத்தோ ஜக்ஜித் சிங், ரோஸ்மா எதிர்வரும் நவம்பர் 24 அல்லது அதற்குள் மலேசியாவுக்குத் திரும்புவார் என்றும் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதற்கிடையில், ரோஸ்மாவின் பயணத் தேதிகள் ஒப்புக் கொள்ளப்பட்ட விசாரணைத் தேதிகளைப் பாதிக்காத நிலையில், இந்த விண்ணப்பத்திற்கு அரசுத் தரப்பு ஆட்சேபனையும் இல்லை என்று துணை அரசு வழக்கறிஞர் முஹமட் முஸ்தபா பி.குன்யாலம் நீதிமன்றத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here