சீனர் இடுகாட்டில் 3 குடும்பங்கள் பரிதவிப்பு!

கிள்ளான் –

கிள்ளான் மேருவில் உள்ள ஃபேரி பார்க் சீனர் இடுகாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று இந்தியர் குடும்பங்கள் எவ்வித உதவிகளும் இன்றி பரிதவித்துக் கொண்டிருக்கின்றன.

சீனர்களுக்குச் சொந்தமான இந்த இடுகாட்டில் உள்ள ஒரு வீட்டில் 12 ஆண்டுகளாக மூன்று இந்திய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கலைச்செல்வி வேங்கு (வயது 38) என்ற தனித்து வாழும் இந்திய மாது தன் சகோதரர் – சகோதரிகளுடன் இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

45 வயது முதல் 9 மாதக் கைக்குழந்தை உட்பட மொத்தம் 16 பேர் இந்த வீட்டில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருவது மிகவும் பரிதாபமாக உள்ளது.
கலைச்செல்விக்கு நிரந்த வேலை இல்லை. இவரின் சகோதரர் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

வீட்டில் உள்ள 16 பேர் ஊட்டச்சத்து உணவு இல்லாமல் அரை வயிற்றுடன் தினசரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு உதவுவதாகக் கூறியவர்கள் இதுநாள்வரை எதுவும் செய்யவில்லை. யாரை நம்புவது என்று தெரியவில்லை.

நாங்கள் தங்கியிருக்கும் சீனர் இடுகாட்டு ஆலய வீடும் எந்நேரத்திலும் உடைபடும் அபாயத்தில் உள்ளது. தற்போது கோவிட் -19 கிருமிநோய் தாக்கத்தினால் இந்த வீட்டை உடைப்பதை அதன் உரிமையாளர் தள்ளிப் போட்டிருக்கிறார்.

வீட்டைக் காலி செய்யும்படி எங்களுக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது. நிரந்தர வருமானம் இல்லை. கையில் பணமும் இல்லை. எங்கே போவோம் என்று கலைச்செல்வி வேதனையோடு தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோய் தாக்கத்தினால் இப்போது என் சகோதரரும் வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார். இதனால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளோம்.
கிள்ளான் மேரு ஃபேரி பார்க் சீனர் இடுகாட்டிற்கு வரும் பொதுமக்கள் எங்களுக்கு உணவுப் பொருட்களை வாங்கித் தந்தால் கோடி புண்ணியம் என்று அவர் கூறினார்.

பொது இயக்கங்கள், நல்லுள்ளங்கள் பலருக்கு உதவி வருகின்றன. அந்த வகையில் கைக்குழந்தையுடன் 16 பேருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் மீதும் பொதுமக்கள் பார்வை பட வேண்டும்.

வயிறார சாப்பிட்டு பல நாட்கள் ஆகின்றன. பொதுமக்கள் தயவு செய்து உதவும்படி கலைச்செல்வி கேட்டுக் கொண்டார். எங்களுக்கு மலிவு விலை வீட்டை வாடகைக்குத் தந்தால் போதும் என்றும் அவர் கூறினார்.

இவர்களுக்கு உதவ விரும்புவோர் 018-3206534 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here