பருவநிலை மாற்றத்தின் ஆபத்துகளை உணர்த்த நேரடியாக கடலில் இறங்கிய துவாலு நாட்டின் தலைவர்

கிளாஸ்கோ: பருவநிலை மாற்றத்தின் ஆபத்தை உணர்த்தும் வகையில் துவாலு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் கோஃப் கடலில் இருந்து தனது கிளாஸ்கோ மாநாட்டு உரையைப் படித்தார். இன்றைய தினத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் முக்கிய பிரச்சினையாக உள்ளது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதர்கள் சுற்றுப்புறத்தை மிகவும் மோசமாக மாசடைய வைப்பதால் பருவநிலை மாற்றம் அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது.

நிலைமை மோசம்

இதனால் புவி வெப்ப மயமாதலும் அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றமும் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முன்பு ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே பருவநிலை பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகமும் பருவநிலை மாற்றத்தால் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. கொரோனா காலத்திலும் புவி மாசுபாடு குறைவதாக இல்லை.

பருவநிலை மாற்றம்

இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் திடீரென அமெரிக்கா கனடா நாடுகளில் கடுமையான வெப்ப அலை ஏற்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஜெர்மனியில் மிகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல சீனாவிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாகப் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு மாநிலங்களில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதிலும் பலர் உயிரிழந்தனர்.

கடலில் இறங்கிய அமைச்சர்

இந்நிலையில், பருவநிலை மாற்றத்தின் ஆபத்தை உணர்த்தும் வகையில் துவாலு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் கோஃப் கடலில் இருந்து தனது கிளாஸ்கோ மாநாட்டு உரையைப் படித்தார். முட்டி அளவு நீர் இருக்கும் பகுதியில் நின்ற சைமன் கோஃப, அங்கிருந்தபடியே தனது கிளாஸ்கோ மாநாட்டு உரையை வாசித்தார். இது குறித்த படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மாநாட்டில் பேச்சு

சைமன் கோஃப் தனது உரையில், “இந்த கிளாஸ்கோ மாநாட்டின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றால் துவாலு நேரடியாகவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க நாங்கள் பல முக்கிய துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். உலக நாடுகளும் இந்த விவகாரத்தில் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

துவாலு நாடு

பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு குட்டி தீவு நாடு தான் துவாலு. மொத்த 26 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட இந்த நாடு தான், வாடிக்கன்நகருக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நாடு பருவநிலை மாற்றத்தாலும் உயரும் கடல்நீராலும் மோசமாகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here