பேராக்கில் கடந்த 4 நாட்களில் 368 போதைப்பித்தர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் கைது

ஈப்போ, நவம்பர் 24 :

பேராக் மாநிலத்தில் “ஓப்ஸ் சாராங் காஸ் (Ops Sarang Khas) ” நடவடிக்கையின் கீழ் சனிக்கிழமை தொடங்கி நேற்று வரை,  நடைபெற்ற தனித்தனி சோதனைகளில் 13 முதல் 60 வயதுக்குட்பட்ட 368 போதைப்பித்தர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக 47 பேரும், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 140 பேரும், போதைக்கு அடிமையானவர்கள் 181 பேரும் கைது செய்யப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களில் 142 பேர் தற்போது ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) இன் கீழும் மற்றும் 39 பேர் போதைக்கு அடிமையானவர்கள் சட்டம் 1983 இன் பிரிவு 3 (1) இன் கீழும் விசாரிக்கப்படுகிறார்கள்.

“இந்தச் சோதனையின் போது, ​​சிறப்புத் தடுப்பு நடவடிக்கைகள் சட்டம் 1985 இன் கீழ் ஒரு நபரையும், தேடப்படும் ஒரு நபரையும் போலீசார் கைது செய்தனர்,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சோதனையின் போது, ​​649.2 கிராம் ஹெராயின், சயாபு (81.5 கிராம்), கஞ்சா (51.31 கிராம்), எரிமின் 5 என்ற எட்டு மாத்திரைகள், எக்ஸ்டஸி (3.33 கிராம்), மூன்று லிட்டர் கெத்தும் ஜூஸ், 33,809.70 வெள்ளி மதிப்புள்ள 9 கிலோகிராம் கெத்தும் இலைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை (நவ.20)  நள்ளிரவு 12.01 மணி முதல் நேற்று (நவ.23) பிற்பகல் 2 மணி வரை நடத்தப்பட்ட சோதனையின் போது, பல வாகனங்கள் மற்றும் RM13,600 மதிப்புள்ள ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததாகவும் மியோர் மேலும் கூறினார்.

“மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த (NCID) 400 காவல்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் தொண்டர் படை (ரேலா) அதிகாரிகள் 30 பேரும் இணைந்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

“அடையாளம் காணப்பட்ட இடங்களில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“உள்ளூர் பகுதிகளில் போதைக்கு அடிமையானவர்களின் இருப்பு குறித்த சமூகத்தின் கவலையை குறைக்க இது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here